இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.
blogger templatesBlogger Tips and TricksFetured Content Slider

திங்கள், 24 மார்ச், 2014

சேமியா தயாரிப்பு!

அவசரத்துக்குத் தயார் செய்யலாம் என்பதோடு, எளிதில் ஜீரணமாகும் என்பதால் நகர்ப்புறங்களில் சேமியாவைப் பயன்படுத்துபவர்கள் அதிகம்!
காலை உணவில் முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டது சேமியா. அவசரத்துக்குத் தயார் செய்யலாம் என்பதோடு, எளிதில் ஜீரணமாகும் என்பதால், நகர்ப்புறங்களில் இதை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
உற்பத்தி நடைமுறை!
சுத்தமான மைதா மாவை கலவை இயந்திரத்தில் கொட்டி, தேவையான அளவுக்குத் தண்ணீர்விட்டு மாவு பதமாக வந்ததும் அதை எடுத்து சேமியாவுக்கான அச்சு இயந்திரத்தில் கொட்டித் தயாரிக்க வேண்டியதுதான். அச்சு இயந்திரத்திலிருந்து வெளிவரும் சேமியாவை இதற்கென உள்ள தாங்கியில் தொங்கவிட்டு, அதை நீராவியில் வேகவைக்கும் இயந்திரத்துக்குள் செலுத்தி, வேகவைக்க வேண்டும். பிறகு அதைச் சூரியஒளியில் காயவைக்க வேண்டும். நவீன வெப்பக் கூடாரம் அமைத்துக்கொண்டால், இன்னும் விரைவாகச் சேமியா உலரும். இப்படிப் பதப்படுத்தப்பட்ட சேமியாவை பாக்கெட்களில் அடைத்து விற்பனைக்கு அனுப்ப வேண்டியதுதான்.
இடத் தேவை!
மூலப்பொருள் மற்றும் தயாரான பொருட்களை ஸ்டாக் வைக்க ஓர்  அறை, இயந்திரம் வைக்க ஓர் அறை என இரண்டு அறைகள் போதும். பாய்லர் பெட்டகத்தைக் (நீராவி இயந்திரம்) கட்டடத்துக்கு வெளியில் வைத்துக்கொள்ளலாம். தவிர, சூரிய ஒளியில் உலர்த்த  தளம் வேண்டும். தளத்தில் வெப்பக் கூடாரம் அமைத்தால், சேமியா விரைவாக உலரும்.
தேவையானவை!
மாவு கலக்கும் இயந்திரம்,
சேமியா பிழியும் இயந்திரம்,
நீராவி இயந்திரம் (பாய்லர் பெட்டகம்),
எடை மற்றும் பேங்கிங் இயந்திரங்கள்,
மின்சாரம் 10 ஹெச்பி.
திட்ட அறிக்கை! ()
இடம்: வாடகை (உள்ளூர் நிலவரத்துக்கேற்ப)
இயந்திரம்                 : 3 லட்சம்
சூரிய ஒளிக்கொட்டகை    : 80 ஆயிரம்
மின்சார இணைப்பு         : 1.20 லட்சம்
நடைமுறை மூலதனம்       : 4 லட்சம்
மொத்தம்                : 9 லட்சம்
மானியம்!
பாரதப் பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) மூலம் மானியம் பெற முடியும் என்பது முக்கியமான விஷயம்!
முதலீடு! ()
நமது பங்கு 5%          :  45 ஆயிரம்
மானியம் 25%             :  2.25 லட்சம்
வங்கிக் கடன் 70%       :  6.30 லட்சம்
திட்ட அனுமானங்கள்!
* தினசரி 600 முதல் 1,000 கிலோ வரை உற்பத்தி செய்யலாம். (1 மணி நேரத்துக்குள் 80 - 90 கிலோ வரை தயாரிக்கும் இயந்திரத்தின் மூலம்!)  
* உற்பத்தி செய்யும்போது அதிகபட்சமாக 5 சதவிகிதம் இழப்பு ஏற்படும்.
* ஒரு பாக்கெட் 170 கிராம் வீதம் பேக் செய்து 20 பாக்கெட்களைக் கொண்ட பண்டலாக அனுப்பலாம்.
ஒரு பாக்கெட்டின் விலை ரூ.7.50. ஒரு பண்டல் விலை ரூ.150. (20X7.50=150) சில்லறை விற்பனையாளர்கள் ஒரு பாக்கெட் அதிகபட்சமாக ரூ.15 வரை விற்பனை செய்ய வாய்ப்புண்டு.
* பாய்லர் பெட்டகத்துக்கான எரிபொருளாக விறகினைப் பயன்படுத்தலாம். இதற்கான செலவு ஒரு மாதத்துக்கு: ரூ.10,000
பணியாளர்கள்! ()
மேற்பார்வையாளர் : 1X10,000 = 10,000
தொழிலாளர்கள்   : 5X6,000  = 30,000
பேக்கிங் மற்றும்
இதர வேலைகள் : 2X5,000  = 10,000
விற்பனையாளர்     : 2X6000  = 12,000
_______
மொத்தம்           62,000
_______
மொத்த விற்பனை!
600 கிலோவுக்கு 5% கழிவுபோக 570 கிலோ உற்பத்தி.
ஒரு பாக்கெட் 170 கிராம் எனில்,  570 கிலோவில் 3,352 பாக்கெட்கள் கிடைக்கும். இதை 20 பாக்கெட்கள் வீதம் பண்டலாக்கினால் 167 பண்டல் கிடைக்கும்.
இதன்படி ஒருநாள் உற்பத்தி வரவு: ரூ.25,050. (167X150 = ரூ.25,050) மாதத்துக்கு 25 வேலைநாட்கள் எனக் கணக்கிட்டால் ஒருமாத விற்பனை வரவு 25Xரூ.25,050 = ரூ.6,26,250.
செலவுகள்!
மூலப்பொருள் செலவு:
மைதா மாவு 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூ.1,200-க்குக் கிடைக்கும். மொத்தமாக வாங்கினால், விலையைக் குறைத்து வாங்கலாம். (ஒரு கிலோ ரூ.24)
ஒருநாள் உற்பத்தி தோராயமாக 600 கிலோ X ரூ.24 = ரூ.14,400. மாதத்துக்கு 25 வேலைநாட்கள் எனக் கணக்கிட்டால் ஒரு மாத செலவு : ரூ.25Xரூ.14,400 = ரூ.3,60,000
பேக்கிங் செலவு:
ஒரு பாக்கெட்டுக்கு 60 காசு. 20 பாக்கெட்களைக்கொண்ட பண்டலுக்கு ஆகும் பேக்கிங் செலவு ரூ.12. பண்டல் செலவு ரூ.3-ஆக ஒரு பண்டலுக்கான பேக்கிங் செலவு ரூ.15. தினசரி 167 பண்டலுக்கான செலவு 167X15 = ரூ.2505. ஒரு மாதத்துக்கு 25 வேலைநாட்கள் எனக் கணக்கிட்டால் ஒரு மாதத்துக்கான பேக்கிங் மற்றும் பண்டல் செலவு: ரூ.2505X25= ரூ.62,625
10 ஹெச்பி மின்சாரம்: ரூ.10,000
மொத்தச் செலவு! ()
மூலப்பொருள்             :   3,60,000
பேக்கிங்                  :   62,625
மின்சாரம்                :      10,000
வேலையாட்கள்             :      62,000
விற்பனைச் செலவு       :       5,000
மேலாண்மைச் செலவு     :       5,000
இயந்திரப் பராமரிப்பு     :       5,000
எரிபொருள் செலவு       :      10,000
வட்டி 12.5%           :       6,600
தவணை (60 மாதம்)     :      10,500
தேய்மானம்                :       6,250
இதரச் செலவு          :      10,000
மொத்தச் செலவு        :     5,52,975
மொத்த விற்பனை வரவு   :     6,25,000
மொத்த செலவு         :     5,53,000
  ______
லாபம்  (வாடகை தவிர்த்து)       72,000
______
இங்கு நாம் குறிப்பிட்டிருப்பது தினசரி ஒரு ஷிப்ட் வீதம் மாதம் 25 வேலைநாட்களுக்கான வரவு செலவுத் திட்டத்தை மட்டுமே. வேலை நேரத்தைக் கூட்டினால் வருமானமும் அதிகரிக்கும்.

திறமையான மார்க்கெட்டிங் அவசியம்!
எஸ்.கார்த்திக், ஸ்டார் சேமியா, ஈரோடு.
''நான் கடந்த மூன்று வருடங்களாக இந்தத் தொழிலில் இருக்கிறேன். இதற்குமுன் வேறு ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து இந்தத் தொழிலைக் கற்றுக்கொண்டேன். ஆரம்பத்தில் கையில் இருந்த சிறிய முதலீடு மற்றும் கடன் வாங்கித்தான் இந்தத் தொழிலில் இறங்கினேன். அதிக முதலீடுகள் போட்டு பெரிய அளவில் செய்தால் ப்ராண்டடு நிறுவனங்களோடு போட்டிப் போடலாம். ஆனால், சிறிய அளவில் என்பதால் லோக்கல் கடைகளுக்கு மட்டுமே சப்ளை செய்கிறேன். அனைத்து செலவுகளும்போக மாதம் 20 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் வருகிறது. மூலப்பொருளான மைதா மாவை மொத்தமாகக் கொள்முதல் செய்தால் குறைந்த விலைக்கு சப்ளை செய்ய முடியும். இந்தத் தொழிலுக்கு நல்ல திறமையான மார்க்கெட்டிங் அவசியம். நான் எனது ப்ராண்டு தவிர, வேறு ப்ராண்டுகளுக்கும் சேமியா உற்பத்தி செய்து கொடுத்து வருகிறேன்.''
 படங்கள்:  மு.சரவணக்குமார்.
(திட்டவிவரங்கள் உதவி: ராமசாமி தேசாய், திட்ட மேலாளர், தொழில் முனைவோர் சுயவேலை மேம்பாட்டு நிறுவனம், பாரதிதாசன் பல்கலைக்கழகம்.

ஹலோபிளாக் கற்கள் தயாரித்து விற்பது எப்படி?

வீடு கட்டுவது என்பது சாதாரண விஷயமில்லை! பக்காவாக திட்டமிட்டு வேலையைத் தொடங்கினால் அப்போதுதான் சிமென்ட் விலை ஏறிவிட்டது, கம்பி விலை ஏறிவிட்டது, மணல் விலை ஏறி விட்டது என்பார்கள்.

இந்த கட்டுமான பொருட்களின் விலையேற்றத் தைக் கட்டுப்படுத்த எந்த கட்டுப்பாடும் இல்லை. அதிலும் செங்கல் விலை சொல்லவே வேண்டாம். ஏரியாவுக்கு ஏரியா விலை வித்தியாசம் எகிறுகிறது. எந்த டைப் வீடு கட்டினாலும் செங்கல் இல்லாமல் காரியம் நடக்காது. அந்த அளவுக்கு அதன் தேவை இருக்கிறது. பழைய பாணியில் எல்லா பணிகளுக்கும் செங்கல்லை மட்டுமே ஏன் நம்பியிருக்க வேண்டும்? வேலையை இன்னும் சுலபமாக்க வேறு தொழில்நுட்பத்தைப் புகுத்தினா லென்ன என்ற முயற்சியில் வந்தது தான் இந்த ‘ஹாலோ பிளாக்’. செங்கல்லைவிட லேசானதாலும், சிமென்ட் பயன்பாட்டை குறைப்பதாலும் கட்டுமானத் தொழில் உலகில் இப்போது நீங்காத இடம்பிடித்து விட்டது இந்த ஹாலோ பிளாக்.

ஒரேஒரு ஹாலோ பிளாக் நான்கு செங்கல்லுக்கு ஈடாக தேவையைப் பூர்த்திசெய்து விடுகிறது. வேலையும் சுலபம். இதனால் விறுவிறுவென கட்டட வேலைகள் முடிந்து விடுவதால் கட்டுமானத் துறையில் இதன் தேவை தற்போது அதிகரித்துள்ளது.  காம்பவுன்ட் சுவர், ஆர்ச்சுகள் போன்றவற்றைக் கட்டுவதற்கு அதிகளவில் இதைப் பயன்படுத்துகிறார்கள். அதுமட்டுமல்லாமல் செலவும் கைகளுக்குள் அடங்கி விடுகிறது.

www.tholilulagam.com 


ஆர்.சி.சி, ஜி.ஐ. ஷீட்ஸ், ஏ.சி.சி. ஷீட்ஸ் போன்ற ரூஃபிங்கிற்கு சப்போர்ட்டாகவும் செங்கல், கற்கள் போன்றவைகளுக்கு மாற்றாகவும்  ஹாலோ பிளாக் இடம் பிடித்து விட்டதால் நாளுக்குநாள் இதன் தேவை அதிகரிக்கவே செய்யும். உத்தரவாதமான நல்ல வருமானம் தரக்கூடிய தொழில் என்பதால் துணிந்து இறங்கலாம். கட்டுமானத் தொழில் வளர வளர, இந்தத் தொழிலுக்கும் ஏறுமுகம்தான்.


தயாரிக்கும் முறை  : கருங்கல் குவாரியிலிருந்து வெளியேறும் மணல்துகள்கள், அவல் ஜல்லி, சிமென்ட் போன்றவைகள் தான் முக்கிய மூலப் பொருட்கள். எல்லாவற்றையும் தகுந்த விகிதத்தில் கலவையாக்கி லேசான ஈரப்பதத்தோடு இதற்கென்றே உள்ள ஹைட்ராலிக் ஆபரேட்டிங் இயந்திரத்தில் கொட்டி இயந்திரத்தை இயக்கினால் நிமிடத்தில் ஹாலோ பிளாக் ரெடி!   அதிக பலமிக்க ஹாலோ பிளாக் வேண்டுமெனில் சிமென்ட், மணல், அவல் ஜல்லி போன்றவைகளை 1:3:6 என்கிற விகிதத்தில் கலக்க வேண்டும். இதுவே சாதாரணமான கட்டடங்களுக்கு எனில் 1:5:8 என்கிற விகிதத்தில் இருப்பதுபோல பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர், சிமென்ட் கலவை 0.4:1 என்கிற விகிதத்தில் இருக்க வேண்டும்.

www.tholilulagam.com

www.tholilulagam.com

 பைனான்ஸ்


சொந்த இடம் இருந்தால் நல்லது. இல்லையென்றால் வாடகைக்கு எடுத் தும் செய்யலாம். இடமிருந்து, சொந்தமாக கட்டடம் கட்டும்பட்சத்தில் அந்த வகைக்கு சுமார் ஆறு லட்சம் ரூபாய் வரை செலவாகும். அத்துடன் பிளான்ட் மற்றும் இயந்திரத்திற்கு மூன்று லட்சம் ரூபாயும், செயல் பாட்டு மூலதனத்துக்கு ஒரு லட்சம் ரூபாயும் என மொத்தம் பத்து லட்சம் ரூபாய் வரை ஆகும்.


மூலதனம்   


இந்த தொழி லைத் துவங்க நினைக்கும் ஒருவர் தனது கையிலிருந்து ஐம்பதாயிரம் ரூபாய் வரை மூலதனமாக போட வேண்டியது வரும். மீதமுள்ள ஒன்பதரை லட்ச ரூபாயை வங்கியிலிருந்து கடனாகப் பெற்றுக் கொள்ளலாம்.

 ஆட்கள் தேவை


 முழு உற்பத்தி திறனில் வேலை பார்க்க பத்து நபர்கள் தேவைப்படு வார்கள். நல்ல ஈடுபாட்டுடன் வேலைபார்க்கும் ஒன்பது பேரும், விற்பனை மற்றும் கலெக்ஷன் நிர்வாகம் செய்வதற்கு ஒருவரும் போதுமானது.

வார்ப்பு அளவுகள்

கற்கள் மூன்று அளவுகளில் உள்ளன.

4 இஞ்ச், 6 இஞ்ச்,  8 இஞ்ச் என்ற அளவுகளில் இருக்கின்றன.

4 இஞ்ச் கற்கள் பாத்ரூம் கட்டுவதற்குப் பயன்படுகிறது. (இதன் நீளம் 15 இஞ்ச், அகலம் 4 இஞ்ச், உயரம் 8 இஞ்ச்)

6 இஞ்ச் கற்கள் ஓட்டு வீடு கட்டப் பயன்படுகிறது. இதற்கு அகலம் மட்டும் வேறுபடும் (அகலம் 6 இஞ்ச்)

8 இஞ்ச் கற்கள் மாடி வீடு கட்டப் பயன்படுகிறது. இதற்கு அகலம் மட்டும் வேறுபடும் (அகலம் 8 இஞ்ச்)

சாதகமான விஷயம்


சாதாரணமாக மழைக் காலங்களில் செங்கல்  தயாரிக்க முடியாது.  காய வைப்பதற்கேற்ப வெயில் இருக்காது என்பதால் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் செங்கல் தொழில் அடியோடு பாதிக்கப்படும். ஆனால்,  ஹாலோ பிளாக் தொழிலில் அப்படியான கவலை இல்லை. மழைக் காலங்களில்கூட தயார் செய்ய முடியும். இயந்திரத்திலிருந்து எடுத்த அரை மணி நேரத்திற்குள் இந்த கற்கள் காய்ந்து விடுவதால் மழைக்காலம் என்றாலும் பாதிப்புகள் ஏற்படாது.

ரிஸ்க்

தொடர்ச்சி யான மின்சாரம் தான் இதன் முக்கிய தேவை. மின்தட்டுப்பாடுதான் இந்த தொழிலை வளரவிடாமல் தடுக்கும் முக்கியமான விஷயமாகும். மின்சாரம் தொடர்ச்சியாகக் கிடைத்தால் நல்ல லாபம்தான்.

இயந்திரம்

இந்த  ஹைட்ராலிக் ஆபரேட்டிங் இயந்திரம் தமிழ்நாட்டிலேயே கிடைக்கிறது. இது மேனுவல் / ஆட்டோமேட்டிக் மற்றும் தயாரிப்பு கற்களின் எண்ணிக்கையை பொருத்தும் பல்வேறு வகைப்படுத்தப் படுகிறது. இந்த நிறுவனத்தை துவங்க விரும்புபவர்கள் இது பற்றி மேலும் அறிய விரும்பினாலோ அல்லது லோன் விபரங்கள் , இயந்திரங்கள் தேவைப்பட்டாலோ எங்களது அனுபவமிக்க தொழில் உலகம் ஆலோசகர்களை செல்பேசியில்/ நேரில்  தொடர்பு கொண்டு பெறலாம். செல் எண்கள்: 8220506646  உழைக்கும் ஆர்வமும், தொழில் செய்து வாழ்வில் வெற்றியாளராக மாற விரும்புபர்களும் உளனே இத்தொழிலை ஆரம்பித்து வாழ்வில் சிறப்புருங்கள்.

www.tholilulagam.com 
www.tholilulagam.com
www.tholilulagam.com

ஆயில் மில் - சுயதொழில்

வறுவல், பொரியல் என எண்ணெய்யில் செய்யும் உணவு அயிட்டங்கள் அனைத்திற்கும் நம்மவர்கள் அடிமை. நம்முடைய தினசரி சமையலில் எண்ணெய் கலக்காத உணவு என்று எதுவுமில்லை. தோசையில் ஆரம்பித்து பூரி, சப்பாத்தி வரை அனைத்தையும் ஏதாவது ஒரு எண்ணெய்யில் செய்து சாப்பிட்டால் மட்டுமே நம்மவர்களுக்கு திருப்தி. தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், பாமாயில் என பலவகையான எண்ணெய் அயிட்டங்கள் நம்மூரில் இருக்கிறது. நிலக் கடலை, சோயா பீன்ஸ், தேங்காய், எள் போன்ற மூலப் பொருட்களிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.

சந்தை வாய்ப்பு!


உணவுப் பொருட்களுக்கான தேவை இருக்கும் வரை எண்ணெய்க்கான தேவையும் இருக்கும். வீடுகள், ஓட்டல்கள், சாலையோர உணவகங்களில் எண்ணெய் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. பிரியாணி, பஜ்ஜி, வடைகள், நான்-வெஜ் அயிட்டங்கள் தயார் செய்வதற்கு அதிக அளவில் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. தவிர, ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு குறைந்தது மூன்று லிட்டர் எண்ணெய் தேவைப்படுகிறது. தேசிய அளவில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி என்பது எந்த சூழ்நிலையிலும் சரிந்து போகாத தொழில். தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் தேங்காய் எண்ணெய் தேவை பெரிய அளவில் உள்ளதால், என்றுமே இதன் மார்க்கெட் களைகட்டியிருக்கும்.


  

முதலீடு!

எண்ணெய் உற்பத்தி செய்யத் தேவைப்படும் முக்கியமான முதலீடு என்றால் கட்டடமும், இயந்திரமும்தான். ஆண்டுக்கு 12,000 லிட்டர் எண்ணெய் உற்பத்தி செய்யும் மில் ஒன்றைத் தொடங்க சுமார் 15 லட்ச ரூபாய் தேவைப்படும். இந்த தொழிலைத் தொடங்கும் நிறுவனர் 15%, மீதமுள்ள 85% கடன் மற்றும் மானியம் மூலம் பெற்றுக் கொண்டு தொழிலைத் தொடங்கலாம்.

கட்டடம்!

ஆயில் மில் தொடங்க குறைந்தபட்சம் 30 சென்ட், அதிகபட்சமாக ஒரு ஏக்கர் வரை இடம் தேவைப்படும். தேவையான இடம் சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ எடுத்துக் கொள்ளலாம். எண்ணெய் உற்பத்திக்குத் தகுந்தாற்போல் கட்டடங்களை அமைப்பது அவசியம்.

வேலையாட்கள்!

இத்தொழிலில் வேலையாட் களின் பங்கு மிகவும் அவசியம். ஒரு நாளைக்கு 32 லிட்டர் உற்பத்தி செய்வதற்கு திறமையான வேலையாள் ஒருவர், ஒரு சூப்பர்வைஸர் என இரண்டு நபர்கள் தேவை.
 


மூலப் பொருட்கள்!

நிலக் கடலை, எள், தேங்காய், சோயா பீன்ஸ் போன்ற பொருட்கள்தான் முக்கிய மூலப் பொருட்கள். இதில் எது உங்களுக்கு சுலபமாகக் கிடைக்குமோ அதைக் கொண்டு எண்ணெய் உற்பத்தி செய்யலாம். சில இடங்களில் மேற்சொன்ன எல்லா மூலப் பொருட்களும் எளிதாகக் கிடைக்கும்பட்சத்தில், எல்லாவிதமான எண்ணெய்களையும் உற்பத்தி செய்யலாம். ஆனால், ஒவ்வொன்றுக்கும் தனித் தனி இயந்திரங்கள் தேவைப்படும். காரணம், ஒரு இயந்திரத்தில் ஒரு வகையான எண்ணெய் மட்டுமே தயார் செய்ய முடியும். தேங்காய் கிடைக்கும்போது தேங்காய் எண்ணெய், எள் கிடைக்கும் போது நல்லெண்ணெய் என மாதத்திற்கு ஒரு எண்ணெய்யை நம்மால் தயார் செய்ய முடியாது. இங்கு நாம் தேங்காய் எண்ணெய் தயாரிப்பு மட்டுமே பார்க்க இருக்கிறோம்.தேங்காய் எண்ணெய் தயார் செய்ய தேங்காய்தான் முக்கிய மூலப் பொருள். நூறு கிலோ தேங்காய் பருப்பிலிருந்து 63 கிலோ எண்ணெய் உற்பத்தி செய்ய முடியும்.

இயந்திரம்!

எக்ஸ்பெல்லர், வடிகட்டும் இயந்திரம், பாய்லர், அளவிடும் இயந்திரங்கள் என மொத்தம் 90,000 ரூபாய் வரை இயந்திரத்திற்குச் செலவாகும். பெரும்பாலும் இந்த இயந்திரங்கள் அனைத்தும் தமிழகத்திலேயே கிடைக்கிறது.


 

தயாரிப்பு முறை!

தேங்காய் பருப்பு தனியாகவும் கிடைக்கும், அல்லது தேங்காயிலிருந்தும் பருப்பை நாமே எடுத்து கொள்ளலாம். இப்படி தனியே எடுத்த தேங்காய் பருப்பில் ஈரப்பதம் அதிகம் இருக்கும் என்பதால் எண்ணெய் எடுப்பது கடினம். எனவே அதை பாய்லர் வெப்பத்தின் மூலம் ஈரத்தை உறிஞ்சி, உலர வைக்கிறார்கள். பின்னர் கட்டர் இயந்திரத்தின் மூலம் தேங்காயைத் துண்டு துண்டாக்கி கிரஷிங் மெஷினில் போட்டு அரைக்கிறார்கள். இதிலிருந்து எண்ணெய் பிழிந்தெடுக்கப்பட்டவுடன் அதன் சக்கைகள் வெளியே தள்ளப்படுகிறது. இந்த தேங்காய் எண்ணெய் இதன்பிறகு ஃபில்டர் இயந்திரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு கசடுகள் வடிகட்டப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், ஆயில் ஃபில்லிங்’ இயந்திரம் மூலம் பாக்கெட்டுகளிலும், சிறிய டின்களிலும் அடைக்கப்பட்டு விற்பனைக்கு செல்கிறது.

பிளஸ்!


தேங்காய் எண்ணெய் முக்கியமான சமையல் எண்ணெய் என்பதால், எளிதில் சந்தைப்படுத்த முடியும். தலை முடியில் தேய்த்துக் கொள்வதற்கு பெரும்பாலும் தேங்காய் எண்ணெய்யையே பலரும் பயன்படுத்துவதால் கூடுதல் வாய்ப்பு கிடைக்கிறது.

மைனஸ்!

மூலப் பொருளான தேங்காய் விலையைப் பொறுத்தே இதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தேங்காய் விலை அதிகரிக்கும்போது, மூலப் பொருள் கொள்முதல் விலையும் அதிகரிக்கும். இதனால் தேங்காய் எண்ணெய் விலை உயரும்போது விற்பனை பாதிப்படையும்.இந்த தொழிலின் சூட்சுமங்களை அனுபவ ரீதியாகப் பெற்ற பிறகு தனியாகத் தொடங்கி நடத்தினால் நிச்சயம் வெற்றிதான்!

டிஷ்யூ பேப்பர் தயாரிப்பு!



இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் எண்ணிக்கை குறைவு.
யன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பொருட்களில் டிஷ்யூ பேப்பருக்குத் தனி இடமுண்டு. கை துடைக்க, முகம் துடைக்க என பல வகைகளில் இந்த டிஷ்யூ பேப்பர் பயன்படுகிறது. கைக்குட்டை பயன்படுத்துவதைவிட டிஷ்யூ பேப்பர் பயன்படுத்துவது எளிது என்பதால் இன்றைக்கு பலரும் தங்கள் பைகளில் டிஷ்யூ பேப்பரை வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். தவிர, இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் எண்ணிக்கையும் குறைவு. எனவே, ஈடுபாட்டுடன் இந்தத் தொழிலை செய்தால் வருமானம் நிச்சயம்.
உற்பத்தி செய்வது ஒருபக்கம் என்றால், மார்க்கெட்டிங்கில் காட்டும் வேகம்தான் இந்தத் தொழிலில் ஒருவரை நிலைநிறுத்தும். இன்றைக்கு சின்ன ஹோட்டல்களில்கூட டிஷ்யூ பேப்பர்கள் பயன்படுத்துவதால், மார்க்கெட்டிங்குக்கு நிறைய அலையவேண்டி இருக்காது. சின்னச் சின்ன ஹோட்டல்கள் மொத்த வியாபாரிகளிடமிருந்தே டிஷ்யூ பேப்பர்களை வாங்குவதால், நாம் அவர்களைக் குறிவைக்கலாம். தவிர, கடைக்காரர்களின் பெயர்களை ப்ரின்ட் செய்துகொடுப்பதன் மூலமும் கவர முடியும்.
இப்போதுவரை நமது தமிழக, கேரள சந்தையை வடமாநில உற்பத்தியாளர்களே கையில் வைத்துள்ளனர். திறமையான தொழில்முனைவோர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, உள்ளூர் சந்தையைக் கைப்பற்ற உகந்தத் தொழில் இது.
திட்ட அறிக்கை! ()
இடம் : வாடகை
இயந்திரம் : 16 லட்சம்
நமது பங்கு 5%   : 80ஆயிரம்
மானியம் 25% : 4 லட்சம்  
வங்கிக் கடன் 70% : 11.20 லட்சம்
பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மாநில அரசின் 'நீட்ஸ்’ திட்டம் அல்லது பொது மானியத் திட்டம் என ஏதாவது ஒன்றில் இயந்திரம் வாங்கும் தொகைக்கு மானியம் பெற வாய்ப்பு உண்டு.
இந்தத் தொழிலுக்கு நடைமுறை மூலதனமாக ஒரு மாதத்துக்கு ரூ.2.50 லட்சம் தேவைப்படும். இதற்கு தனியாக வங்கிக் கடன் கிடைக்கும்.
திட்ட அனுமானங்கள்!
மூலப்பொருள் செலவு:
தினசரி ஒரு ஷிப்டுக்கு 100 கிலோ வரைக்கும் பேப்பேர் ரோல்(18 GSM) தேவைப்படும். இதன்படி கணக்கிட்டால், மாதத்துக்கு இரண்டரை முதல் மூன்று டன் வரை பேப்பர் ரோல் தேவைப்படும். 1 கிலோ பேப்பேர் ரோல்  விலை  ரூ.60 முதல் கிடைக்கும். ப்ளைன் டிஷ்யூ பேப்பர் என்றால் கழிவு இருக்காது. ப்ரின்டிங் செய்து தருவது என்றால் சிறிதளவு கழிவு இருக்கும். ஒரு மாதத்துக்கு 25 வேலை நாட்கள் என்று கணக்கிட்டால் பேப்பர் ரோல் செலவு  (100X60X25 =  1,50,000)
விற்பனை வரவு!
பேப்பர் ரோல் உற்பத்திக்குப்பிறகு பாக்கெட் என்கிற கணக்கில் கணக்கிடப்படும். இதன்படி 1 கிலோ பேப்பர் ரோலில் உற்பத்திக்குப்பின் 12 பாக்கெட்டுகள் டிஷ்யூ பேப்பர் கிடைக்கும். ஒரு பாக்கெட் 10 ரூபாய் வரை விற்கலாம். தினசரி 100 கிலோ உற்பத்தி என்றால், ஒருநாளில் 1,200 பாக்கெட்டுகள் கிடைக்கும். அதாவது, ஒருநாளின் விற்பனை வரவு ரூ.12,000.  இதன் அடிப்படையில் மாதத்துக்கு 25 வேலைநாட்கள் என்று கணக்கிட்டால் ஒரு மாத விற்பனை வரவு (12,000X25 = 3,00,000)
செலவுகள்!
உற்பத்தி செய்யப்பட்டபின் 210 பாக்கெட்டுகளாக ஓர் அட்டைப் பெட்டியில் அடைத்து விற்பனைக்கு அனுப்பவேண்டியதுதான். இதற்கான செலவு ஓர் அட்டைப் பெட்டிக்கு ரூ.40 செலவாகும். இதன்படி ஒரு மாதத்துக்கு ஆகும் செலவு ரூ.5,680.
ப்ரின்டிங் செய்துகொடுப்பது என்றால், இரண்டு கலர் இங்க் தேவை. ஒரு கலர் 10 கிலோ ரூ.1,600. நமது ஆர்டர்களைப் பொறுத்து இதைப் பயன்படுத்தலாம். சாதாரணமாக ஏழு, எட்டு மாதங்களுக்கு இதைப் பயன்படுத்தலாம். இதன்படி கணக்கிட்டால் ஒரு மாதத்துக்கு ஆகும் இங்க் செலவு ரூ.457.      
நவீன வாழ்க்கைக்குத் தேவைப்படும் இந்த டிஷ்யூ பேப்பர் உற்பத்தியானது தன்னார்வம் கொண்ட புதிய தொழில்முனைவோர்களுக்கு நிச்சயம் கைதரும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
- நீரை.மகேந்திரன்,
படங்கள்: தி.விஜய்.
(திட்டவிவரங்கள் உதவி: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மேம்பாட்டு நிறுவனம் (MSME Development Institute), சென்னை.
மாதம் 30 ஆயிரம் வருமானம்!
''நான் ஏற்கெனவே ஒரு டிஷ்யூ பேப்பர் தயாரிக்கும் யூனிட்டில் மார்க்கெட்டிங் வேலைகளை செய்து வந்தேன். இந்தத் தொழிலுக்கு இருக்கும் வாய்ப்புகளைப் பார்த்து, நாமே இந்தத் தொழிலை ஏன் செய்யக்கூடாது என்று நினைத்து ஆரம்பித்தேன். என்னை ஊக்குவிக்கிற மாதிரி வங்கிக் கடனும் கிடைத்தது. என் நண்பர்களும் என்னை ஊக்குவித்தனர்.  
தெளிவான மார்க்கெட்டிங் திறமை இருந்தால் இந்தத் தொழிலில் வருமானம் பார்த்துவிடலாம்.  ப்ராண்டு அல்லது ஹோட்டல் பெயர்களை ப்ரின்ட் செய்துகொடுக்கும் சில்லறை விற்பனை வாய்ப்புகள் தவிர, மொத்த விற்பனையாளர்களுக்கும் சப்ளை செய்யமுடியும். தற்போது இரண்டு இயந்திரங்கள் மூலம் டிஷ்யூ பேப்பர்களைத் தயாரிக்கிறேன். தொழிலைத் தொடங்கி இரண்டு ஆண்டுகள்தான் ஆகிறது.
அடுத்ததாக, இன்னொரு இயந்திரம் வாங்கத் திட்டமிட்டுள்ளேன். திறமையான தொழிலாளர்கள், மார்க்கெட்டிங் இரண்டும் இருந்தால் லாபம் நிச்சயம். உள்ளூர் மார்க்கெட் தவிர, கேரளாவுக்கும் அதிக அளவு சப்ளை செய்கிறேன். அனைத்து செலவுகளும் போக, மாதம் சுமார் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் வருகிறது.''

உடனடி இடியாப்பம்!

உடனடி இடியாப்பம்!
இட்லி, தோசை போன்று மிகவும் விரும்பிச் சாப்பிடும் ஓர் உணவு இடியாப்பம். அரிசியைத் தவிர வேறு எந்த பொருட்களும் இதில் சேர்க்கப் படுவதில்லை என்பதால் குழந்தை முதல் வயதானவர்கள் வரை எந்த பயமும் இல்லாமல் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.
இதை தினமும் வீட்டில் செய்வதென்றால் கொஞ்சம் போர் அடிக்கத்தான் செய்யும். காரணம், செய்முறை சரியாக இருந்தால்தான் சுவையான இடியாப்பம் கிடைக்கும்.
இன்றைய பரபரப்பான உலகில் யாருக்கும் ரிலாக்ஸ்டு-ஆக இடியாப்பம் செய்யும் பொறுமை இல்லை. தரமான, சுவையான இடியாப்பம் ரெடியாக கிடைத்தால் நன்றாக இருக்குமே என்றுதான் பலரும் நினைக்கிறார்கள்.
இன்றைக்கு உடனடி இடியாப்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் இருக்கவே செய்கிறது.
முதலில், இடியாப்ப மாவை மாவு பிசையும் இயந்திரத்தில் போட்டு பிசையவேண்டும். பிறகு, அதை இடியாப்பமாக பிழிந்தெடுக்கும் இயந்திரத்துக்கு மாற்றவேண்டும்.
குறிப்பிட்ட எடையில் வட்டமாக முறுக்கு பிழிவதுபோல் அந்த இயந்திரமே பிழிந்தெடுத்துவிடும். இதை நவீன ஓவன்களில் வைத்து 55-60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் காய வைக்கவேண்டும். இப்படி தயாரான இடியாப்பத்தை பேக்கிங் செய்து அனுப்ப வேண்டியதுதான். இந்த நவீன ஓவன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் 1,200 இடியாப்பம் தயார் செய்ய முடியும்.
இந்த இடியாப்பத்தை மீண்டுமொருமுறை வேகவைக்க வேண்டாம். சூடான நீரில் நனைத்தாலே சாப்பிடும் பக்குவத்துக்கு வந்துவிடும். விற்பனைக்கு கொண்டு செல்லும்போது செய்முறை விளக்கத்தையும் தந்துவிட்டால் மார்க்கெட்டிங் செய்வதில் சிக்கல் இருக்காது. இதேமுறையில், ராகி இடியாப்பம்கூட செய்யலாம்.
திட்ட அறிக்கை!
இடம் - வாடகை
இயந்திரம் - 8.75 லட்சம்
நடைமுறை மூலதனம் - 2.25 லட்சம்
மற்ற உபகரணங்கள் - 1 லட்சம்
மின்சாரம் - பயன்பாட்டுக்கு ஏற்ப
மொத்தம் - 12 லட்சம்
நமது பங்கு 5% - 60 ஆயிரம்
மானியம் 25% - 35% - 3 லட்சம்
வங்கிக் கடன் - 8.40 லட்சம்
பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், மாநில அரசின் நீட்ஸ் திட்டம் அல்லது பொது மானிய திட்டம் என ஏதாவது ஒன்றில் மானியம் பெற வாய்ப்பு உண்டு.
திட்ட அனுமானங்கள்!
1. நாள் ஒன்றுக்கு 120 கிலோ அரிசி உபயோகித்து இடியாப்பம் செய்யலாம்.
2. உற்பத்தி செய்யும்போது 10 முதல் 12% எடை குறையும்.
3. ஒரு மணி நேரத்துக்கு 1,200 இடியாப்பம் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இயந்திரம்.
4. 150 கிராம், மற்றும் 200 கிராம் பாக்கெட்டுகளில் விற்பனை செய்யலாம்.
5. தரமான அரிசி 30 ரூபாய்க்கு கிடைக்கும்.
6. 150 கிராம் பாக்கெட்டில் 8 முதல் 9 இடியாப்பம் உள்ள வகையில் உற்பத்தி செய்யவும்.
7. இதை பாலிதீன் பைகளில் (40 மைக்ரான்) உங்கள் பெயர் மற்றும் செய்முறையோடு உள்ள பைகளில் 150 கிராம் அல்லது 200 கிராம் பாக்கெட்களில் பேக் செய்யவும்.
8. பேக்கிங் செலவு ஒரு கிலோவுக்கு ரூ.1.15
9. வேலையாட்கள்.
மேலாளர் 1ஜ் 10,000 = 10,000
இயந்திர தொழிலாளர்கள் 2 ஜ் 8,000 = 16,000
பேக்கிங் தொழிலாளர்கள் 3 ஜ் 6,000 = 18,000
விற்பனையாளர் 1 ஜ் 8,000 = 8000
மொத்தம் = 52,000
10. மின்சாரம் மாதம் = ரூ.2,000
11. 17 கிலோ எரிவாயு 3 சிலிண்டர் -
3 ஜ் ரூ.1,800 = ரூ.5,400
ஒருநாள் உற்பத்தி: 120 கிலோ. இதில் கழிவுகள் 12% போக (120 - 14.40) 105.60 கிலோவுக்கு இடியாப்பம் கிடைக்கும். 10 கிலோவுக்கு 66 பாக்கெட்டுகள் வரை போடலாம்.
ஒரு பாக்கெட் விலை தோராயமாக ரூ.18 என நிர்ணயித்துக்கொள்ளலாம். மாதத்துக்கு 25 வேலை நாட்கள் கணக்கிட்டால் (105.60ஜ்6.6ஜ்18ஜ்25= ரூ.3,13,632) ரூ. 3.13 லட்சம் விற்பனை வருமானம் கிடைக்கும்.
மொத்த செலவு!
வாடகை : 5,000
மூலப்பொருள் : 90,000 (120ஜ்30ஜ்25)
பேக்கிங் செலவு : 3,450 (120ஜ்25ஜ்1.15)
மின்சாரம் : 2,000
எரிவாயு : 5,400
தொழிலாளர் சம்பளம் : 52,000
கடன் வட்டி (12.5%) : 8,750
கடன் தவணை (60 மாதம்) : 14,000
இயந்திர பராமரிப்பு : 10,000
விற்பனை செலவு : 10,000
நடைமுறை மூலதன வட்டி : 2,500
மேலாண்மை செலவு : 5,000
தேய்மானம் : 11,000
மற்றவை : 10,000
மொத்த செலவு : 2,29,100
மொத்த வரவு : 3,13,632.00
மொத்த செலவு : 2,29,100
லாபம் : 84,532
ஒரு பாக்கெட்டுக்கு 150 கிராம் வீதம் அடைக்கவேண்டும். நமது விலை 18 என்றாலும், அதிகபட்ச சில்லறை விலையாக 24 ரூபாய்க்கு ஒரு பாக்கெட்டை விற்பனை செய்ய முடியும்.
(திட்ட விவரங்கள் உதவி: ராமசாமி தேசாய், திட்ட மேலாளர், தொழில்முனைவோர் சுயவேலை மேம்பாட்டு நிறுவனம், பாரதிதாசன் பல்கலைக்கழகம்.)
முத்தையா, ஸ்ரீ அண்ணாமலையார் ஃபுட் ப்ராடக்ட்ஸ்.
''மொத்த ஏஜென்டாக இருந்த அனுபவம் எனக்கு இருந்தது. கூடவே எனது மகன் எம்.பி.ஏ படித்துவிட்டு வந்ததால் உணவுப் பொருள் துறையில் சொந்தமாக தொழில் தொடங்கலாம் என யோசனை வந்தது.
பாரதப் பிரதமர் வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் இந்தத் தொழிலுக்கான திட்ட அறிக்கையைத் தந்தோம். அதிலிருந்து கிடைத்த மானியத்துடன், வங்கிக் கடன் வாங்காமல் நாங்களே முதலீடு போட்டு தொழிலில் இறங்கினோம்.
எங்கள் பகுதியில் இடியாப்பம் இல்லாத பண்டிகைகளே கிடையாது. எனவே, எனது மனைவியின் உதவியுடன் இயந்திர முறையில் இடியாப்பம் தயார் செய்ய ஆரம்பித்தோம். நான் மார்க்கெட்டிங், எனது மகன் நிர்வாகம், மனைவி தயாரிப்பு, மருமகள் கணக்குவழக்குகளைக் கவனிப்பது என செய்து வருகிறோம்.
இதில் பேக்கிங் முக்கியம். நாங்கள் தயாரிக்கும் இடியாப்பம், 9 மாதங்கள்வரை கெடாமல் இருக்கும். எல்லா செலவுகளும்போக மாதம் 40 ஆயிரம் ரூபாய் வரை வரும். தவிர, இடியாப்ப மாவு தனியாக விற்பதன் மூலமும் வருமானம் பார்க்கலாம்.''

ஞாயிறு, 23 மார்ச், 2014

நான்-ஓவன் தயாரிப்புகள்!

இந்தத் தொழிலுக்கு போட்டி இல்லை என்பது பெரிய ப்ளஸ்பாயின்டாக உள்ளது!
ப்ளாஸ்டிக் பொருட்களின் மீதான விழிப்பு உணர்வு அதிகரித்துவரும் சூழலில், நான்-ஓவன் தயாரிப்புகள்தான் அந்த இடத்தைப் பிடித்துவருகிறது. கேரி பேக் முதல் பலவிதமான பொருட்களை இதன் மூலம் உருவாக்க முடியும். ப்ளாஸ்டிக்கைபோல இலகுவானது, உறுதியானது; அதேசமயம், காகிதப்பை போல காற்று, நீர்புகும் தன்மை கொண்டது. மறுசுழற்சி கொண்டது என்பதால் இப்போது அனைத்துத் தேவை களுக்கும் இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
இந்த நான்-ஓவன் மூலம் கேரிபேக், தாம்பூலப்பை தவிர, தலையணை உறை, சீட்கவர், கம்ப்யூட்டர் கவர், மாஸ்க், ஏப்ரான், கிளவ்ஸ் போன்ற பலவகைகளில் பொருட்களை செய்யமுடியும். தற்போது மெடிக்கல் சென்டர்களில் ஸ்கேன் ரிப்போர்ட் கவர், ட்ராவல்ஸ் நிறுவனங்களில் சீட் கவர் போன்றவை இந்த நான்-ஓவன் மெட்டீரியல்களுக்கு வந்துவிட்டன. வழக்கமாக ஒரே தயாரிப்பாக இல்லாமல், புதிய புதிய டிசைன்களில் முயற்சித்தால் வெற்றி நிச்சயம்.
இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், இதைத் தயாரிக்கும் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் மிகக் குறைவு என்பதால் வருமானத்துக்கு பஞ்சமிருக்காது.
ஆட்டோமேட்டிக், செமி ஆட்டோமேட்டிக் என இரண்டு வகைகள் உள்ளன. செமி ஆட்டோமேட்டிக் இயந்திரங்கள் மூலம் குறிப்பிட்ட வகைகள் மட்டுமே உற்பத்தி செய்யமுடியும் என்பதால், நாம்  ஆட்டோமேட்டிக் இயந்திரம் மூலம் உற்பத்தி செய்யும் திட்டத்தைப் பார்ப்போம்.
திட்ட அறிக்கை!
முதலீடு விவரம் ( )
வாடகை: அந்தந்தப் பகுதி நிலவரப்படி
இயந்திரங்கள் : 31,97,249
இதில் கட்டிங் மெஷின், ஸ்லிட்டிங் மெஷின், ப்ரின்டிங் மெஷின், கம்ப்ரஸர், ஸ்டெபிலைஸர் என அனைத்து இயந்திரங்களும் அடக்கம்.
நமது பங்கு 5% = 1,59,862
மானியம் 25% = 7,99,312
வங்கிக் கடன் 70% = 22,38,075
(அ) ஒரு மாதத்துக்கு 25 வேலை நாட்கள்.ஒருநாளின் ஒரு ஷிப்டுக்கு 350 கிலோ வரை உற்பத்தி செய்ய முடியும். இதற்கு தேவையான நான்-ஓவன் பேப்ரிக் ரோல் ஒரு கிலோ 150 ரூபாய். பலவித கலர்களில், அழுத்தங்களில் (ஜி.எஸ்.எம்) வாங்கிக்கொள்ளலாம். (350X150X25 = 13,12,500)
போட்டிகள் இல்லை!
ஜோதிலட்சுமி, உரிமையாளர்,
சென்னை நான்-ஓவன், போரூர், சென்னை.
”இந்தத் தொழிலில் தொடக்கத்தில் சற்று சிரமமாக இருந்தாலும், நாளடைவில் தொழிலின் நெளிவு சுளிவுகளைப் புரிந்துகொண்டேன். வாடிக்கையாளர்கள் தரும் ஆர்டர்களுக்கு மட்டும் வேலை பார்க்காமல் நமது டிசைன்களும் வித்தியாசமாக இருந்தால், நாமே நேரடியாக விற்பனையிலும் இறங்கலாம்.  மூலப்பொருள் வேஸ்ட் இல்லாமல் பார்த்துக்கொள்வது முக்கியம். நம்பகமான, பணியாளர்கள் இருந்தால் லாபம் நிச்சயம். இப்போதைக்கு இந்தத் தொழிலில் போட்டிகள் இல்லை என்பதும் எங்களைத் தேடிவர வைக்கிறது.”

விற்பனைக்கு கைகொடுக்கும்... வியாபார வலைதளம்!

பிட் நோட்டீஸை விநியோகித்து பிசினஸை வளர்த்தது அந்தக் காலம். சிறு நிறுவனமாக இருந்தாலும் அதை வெப்சைட் (Website) மூலம், அதாவது வலைதளங்களின் மூலம் உலகம் முழுக்கக் கொண்டுசெல்வது இந்தக் காலம். வெப்சைட்டை சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் பிசினஸில் நல்ல லாபம் பார்க்க முடியும் என்கிற நிலையில், நாம் செய்துவரும் தொழிலுக்கான வெப்சைட்டை எப்படித் தொடங்குவது? ஆரம்பித்தபிறகு அதை எப்படிக் கையாள்வது, வெப்சைட்களின் மூலம் வாடிக்கையாளர்களை எப்படித் தக்கவைத்துக்கொள்வது என்கிற கேள்விகளுக்கு விரிவான விளக்கம் தந்தார் பாரத் மேட்ரிமோனி நிறுவனத்தின் சமூக வலைதளங் களுக்கான பிரிவின் தலைவர் கே.எஸ்.ராஜசேகர்.
உங்களுக்கென ஒரு வெப்சைட்டை  உருவாக்கும்போது நம்பகமான டொமைன் பதிவாளர்களை அணுக வேண்டும். முதலில், வெப்சைட் ஹோஸ்டிங் (தங்களுக்குத் தேவையான வெப்சைட்டை டிசைன் செய்யும் முறை) செய்ய யாஹூ ஸ்மால் பிசினஸ், சென்னை ஆன்லைன் மற்றும் வேர்டுபிரஸ் ஹோஸ்டிங் வலைதளங்களை அணுகலாம்.

பாலமாகச் செயல்படுகின்றன!
''பிசினஸ் வெப்சைட்கள் வியாபாரத்துக்கும் வாடிக்கையாளர் களுக்கும் இடையே பாலமாகச் செயல்படுகின்றன. தொழில் செய்துவருகிறவர்களில் பெரும்பாலானவர்கள் இதுகுறித்த தொழில்நுட்ப அறிவு தங்களுக்கு இல்லை என்பதால் இந்தப்பக்கமே வராமல் இருக்கிறார்கள்.
ஆனால், இன்றைய நிலையில், வெப்சைட் தொடங்குவதற்குப் பெரிய அளவில் டெக்னிக்கல் விஷயங்கள் தெரிந்திருக்கவேண்டிய அவசியமில்லை.
சரியான தேர்வு முக்கியம்!
இந்த வலைதளங்களே டெக்னிக் சார்ந்த அத்தனை விஷயங்களையும் பார்த்துக்கொள்கின்றன. வெப் ஹோஸ்டிங் செய்ய ஒரு மாதத்துக்கு 250 ரூபாய்க் கட்டணமாக வசூலிக்கப்படும்.
வெப்சைட் வடிவமைப்பு செய்யும்முன்..!
எதற்காக இந்த வெப்சைட் வடிவமைக்கிறோம் (பொருட்களை விற்பதற்காகவா, புதிய வாடிக்கையாளர் களைக் கவர்வதற்காகவா, தொழிலை வளர்த்துக்கொள்வதற்காகவா) என்பதில் தெளிவாக இருக்கவேண்டும்.
அவரவர்களின் தொழில் சார்ந்த மற்ற வெப்சைட்டைப் பார்த்து எது தேவை, எது தேவையில்லை என்பதைத் தெரிந்து வைத்துக்கொண்டு, அதன்பின்னர் நமக்கான வெப்சைட்டை  வடிவமைப்பது நல்லது.
வெப்சைட் வடிவமைப்பின்போது..!
வெப்சைட்டை வடிவமைக்கும் போது டொமைன் பெயரை (உதா: www.tamilnews.com) தேர்வு செய்வதுதான் மிக முக்கியம். இந்த டொமைன் பெயர் வாடிக்கையாளர்கள் எளிதில் நினைவில் வைத்திருக்கும்படி, தொழில் சார்ந்த வார்த்தையாக (மக்களிடம் அதிகம் பயன்படுத்தும் வார்த்தை), ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளை மட்டுமே கொண்டதாக இருக்க வேண்டும். இரண்டு வார்த்தைகள் என்றால் அவை இணைந்தே இருக்க வேண்டும். இரண்டுக்கும் இடையில் சிறப்புக் குறியீடுகளோ எண்களோ இடம்பெறக் கூடாது.
டொமைன் பெயரை தேர்வு செய்து பதிவு செய்ய ஆரம்பக் கட்டணமாக ரூ.600 வசூலிக்கப்படும். டிமாண்ட் கொண்ட டொமைன் பெயர்களுக்கு ஏற்றபடி கட்டணங்கள் மாறுபடலாம். டொமைன் பதிவாளர்களைத் தேர்வு செய்யும்போது மிக எச்சரிக்கையுடன், நம்பகமான ஆட்களையே தேர்வு செய்யவேண்டும்.
வெப்சைட்களில் போடும் தகவல்கள் (தமிழ், ஆங்கிலம் எதுவாக இருந்தாலும்) தெளிவாக இருக்க வேண்டும். வெப்சைட் குறித்தும், அதனை நிர்வகிப்பவர் குறித்தும், உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் குறித்த விவரம், சலுகை விவரம் மற்றும் வாடிக்கையாளர் சேவை குறித்த விவரம் போன்றவற்றை வலைதளங்களில் தரும்போது வாடிக்கையாளர்களிடமிருந்து முழுமையான நம்பிக்கையைப் பெற முடியும்.
வெப்சைட்களை வடிவமைக்கும் போது, அதிலேயே பொருட்களை ஆர்டர் செய்து வாங்கும்படியான 'பே கேட்வே’ (Pay gateway)  ஆப்ஷன் இருக்கிறமாதிரி பார்த்துக்கொள்வது அவசியம்.
இன்றைய நிலையில் ஸ்மார்ட் போன்களில் வெப்சைட்களைப் பார்க்கிறவர்கள் அதிகம் இருப்பதால், அதற்கேற்றமாதிரி தயார் செய்ய வேண்டும்.
வடிமைக்கும் வலைதளத்தை 5-10 ஆண்டுகள் வரையாவது பதிவு செய்யவேண்டும். இதற்குக் குறைவாகப் பதிவு செய்யும்பட்சத்தில் அந்த வெப்சைட்டின் மீது வாடிக்கையாளர் களும், ரேட்டிங் ஏஜென்சிகளும் நம்பிக்கை இழக்கலாம்.
வெப்சைட் வடிவமைத்தபிறகு..!
வெப்சைட்களை உருவாக்கியபிறகு அதை உடனே 'லோக்கல் லிஸ்ட்டிங் சர்வீஸ்’-க்கு (உதா: கூகுள் லோக்கல், யாஹூ லோக்கல், பிங்க் (Bing)) சென்று பதிவுசெய்ய வேண்டும். அதேபோல கிளாஸிஃபைடு சைட்களிலும் வெப்சைட் பெயர்களைப் பதிவு செய்வது அவசியம். லோக்கல் லிஸ்ட்டிங் மற்றும் கிளாஸிஃபைடு சைட்கள்தான் வாடிக்கையாளர்கள் தேடும்போது யார் வெப்சைட்களை லிஸ்ட் செய்திருக்கிறார்களோ, அதையே முதலில் காட்டும்.
புதுமையைத்தான் அனைவரும் விரும்புகின்றனர். அடிக்கடி புதிய தகவல்களைக் கொண்டு உங்கள் இணையதளத்தைப் புதுப்பித்துக்கொண்டே இருப்பது அவசியம்.  முழுமையாக மாற்றாமல், சிறு  மாற்றங்களைச் செய்தாலே போதும்.
வெப்சைட் உருவாக்கியபிறகு அதைக் கட்டாயம் விளம்பரப்படுத்தியே ஆக வேண்டும். உங்களது பிசினஸ் கார்டுகளில் (விசிட்டிங் கார்டு) அச்சிட்டுக்கொள்வதன் மூலம், வெப்சைட் பெயரில் இ-மெயில் ஐடி-ஐ உருவாக்கிக்கொள்வதன் மூலம், சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்துவதன் மூலம் அதைச் சாத்தியப்படுத்தலாம்.
வாடிக்கையாளர் சேவை!
வெப்சைட் வடிவமைக்கும்போது அதனுள் பிளாக்குகளை அமைத்து, தொழில் சார்ந்த பல தகவல்களை வாடிக்கையாளர்களுக்குத் தரலாம். இந்த பிளாக்குகள் மூலம் வாடிக்கையாளர்களுக்குச் சேவைகளை வாரி வழங்கவேண்டும். தகவல்களை எழுத்து வடிவில் மட்டுமல்லாமல், புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்தும் போடலாம். வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள இ-மெயில் ஐடி-யை வெப்சைட்டில் குறிப்பிடச் சொல்லலாம். மெயில் ஐடியை தெரிவிக்கும் வாடிக்கையாளர்களுக்கு மாதம் ஒருமுறை தங்களின் வெப்சைட்கள் குறித்தும், புதிய தகவல்களை மெயில் மூலமும் அனுப்பி அவர்களைக் கவரலாம்.
இப்போது வெப்சைட்டை பார்த்துக் கொண்டிருக்கும்போதே வெப்சைட் நிறுவனத்துடன் பேசும்படியான ஆப்ஷன்கள் வந்துவிட்டன. அந்த வெப்சைட்டில் 'கிளிக் தி கால்’ என்கிற ஆப்ஷன்கள் இருக்கும்பட்சத்தில் அப்போதே வெப்சைட் நிறுவனத்துடன் போனில் உரையாடி, சந்தேகங்களை நிவர்த்திச் செய்து கொள்ளலாம். இதனால் வாடிக்கையாளர்கள் காத்திருக்காமல், உடனுக்குடன் பதில் பெறமுடிகிறது.
பாதுகாப்பு நடவடிக்கைகள்!
வெப்சைட் பயனாளர் பெயர் (User Name), பாஸ்வேர்டு (Password)  போன்ற தகவல்களை ரகசியமாக வைத்திருத்தல் அவசியம். கூகுள் அனலடிக்ஸ் (google analytics)   என்ற ஃபைலை உருவாக்கும் வெப்சைட்டுக்குள் இன்ஸ்டால் செய்துவைத்துக் கொண்டால், அந்த வெப்சைட்டுக்கு வரும்
வாடிக்கையாளர் எங்கிருந்து வந்தார், எத்தனை மணிக்கு வெப்சைட்டை பார்வையிட்டார், எந்தப் பக்கத்தைப் பார்வையிட்டார் என்கிற தகவல்களைப் பெற முடியும்.
கூகுள் வெப்மாஸ்டரில்  (Webmaster)  தங்களின் வெப்சைட்டை பதிவு செய்து, பாதுகாப்பை பலப்படுத்திக்கொள்ளலாம்.
கவனிக்கவேண்டிய விஷயங்கள்!
ஒரு வெப்சைட்டின் முகப்புப் பக்கம் வழியாகவே பலரும் நுழைவார்கள். இதனை அமைப்பதில் அதிகக் கவனம் செலுத்தவேண்டும். முகப்புப் பக்கம் லோடு ஆக அதிக நேரம் எடுத்துக்கொண்டால் பார்ப்பவர்கள் எரிச்சல் அடைவார்கள். தவிர, உங்களைப் பற்றிய தகவல்கள் நேரடியாக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் எளிமையாக இருப்பது நல்லது!
தளத்தைப் பார்க்க வருபவர்களின் எண்ணிக்கையைத் தெரிவிக்கும் வசதி இருப்பது பலரின் கவனத்தை ஈர்க்கும்.
உங்கள் வெப்சைட் உங்களுக்குப் பிடித்த பிரவுஸரில் மட்டுமில்லாமல்,  மற்ற பிரவுஸர்களிலும் சரியாக இயங்க வேண்டும்.
நீங்கள் பதித்துள்ள படங்கள் சரியாக இருக்கின்றனவா, நீங்கள் எதிர்பார்க்கும் தோற்றத்தைத் தருகின்றனவா என்பதை அடிக்கடி நீங்கள் சோதித்து அறியவேண்டும். வெவ்வேறு வேகத்தில் இயங்கும் இணைய இணைப்புகளில் இந்தப் படங்கள் எப்படி இறங்கி இயங்கு கின்றன என்று சோதித்துப் பார்க்க வேண்டும்.
அனைவருக்கும் தெரிந்த மொழிகளில் உங்கள் தளத்தை அமைப்பது நல்லது. அப்போதுதான் பார்ப்பவர்கள் அந்த வெப்சைட் தங்களுக்கானது என்பதை உணர்வார்கள்.''
தொழில் செய்கிறவர்கள் இனி இணையம் மூலமும் கலக்கலாமே!