இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.
blogger templatesBlogger Tips and TricksFetured Content Slider

ஞாயிறு, 12 மே, 2013


பேப்பர் தட்டு தயாரிப்பது எப்படி


சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காதவை பேப்பர் தட்டுகள். ஆடம்பரமாகவும் இருக்கும். வாழை இலை, பிளாஸ்டிக் தட்டுகளுக்கு மாற்றாக விளங்கும் இவற்றை தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த சின்னாம்பாளையத்தில் உள்ள கற்பகவிருட்சம் மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த சுகுணா. அவர் கூறியதாவது: கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் குழுவை துவக்கினோம்.  உறுப்பினர்கள் 5 பேர் சேர்ந்து, பேப்பர் பிளேட் தயாரிக்க பயிற்சி பெற்றோம். வங்கியில் ரூ.5 லட்சம் கடன் வாங்கி தொழிலுக்கு தேவையான மெஷின்களை நிறுவினோம். 

5 பேரும் பக்கத்து பக்கத்து வீடுகளை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டு வேலைகளை சீக்கிரம் முடித்துவிட்டு பேப்பர் பிளேட் தயாரிக்கும் பணிகளை தொடங்குவோம். ஒருவர் பேப்பரை கட்டிங் செய்யும் இயந்திரத்தையும், மற்றொருவர் பிளேட் தயாரிக்கும் மெஷினையும் இயக்குவோம். மற்ற 2 பேர் பேக்கிங் செய்வார்கள். உற்பத்தியோடு விற்பனையையும் நாங்களே கவனிக்கிறோம். மின் தடை இல்லாமல் இருந்தால், ஒரு நாளில் 10 ஆயிரம் பிளேட் தயாரிக்கலாம். ஒரு பிளேட்டுக்கு 20 பைசா லாபம். மாதம் ரூ.18 ஆயிரம் வங்கிக்கு செலுத்துகிறோம். தினசரி சம்பளமாக நாங்கள் தலா ரூ.100 எடுத்து கொள்கிறோம். அலுவலகம், வீடு ஆகியவற்றில் நடைபெறும் விசேஷங்களில் பேப்பர் பிளேட் பயன்பாடு அதிகரித்து வருவதால் தயாரித்தவுடன் விற்று விடுகிறது. 

பொள்ளாச்சி தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளிலும் எங்கள் பேப்பர் தட்டுகளை விற்று வருகிறோம். இதனால் நல்ல லாபம் கிடைக்கிறது. பெண்கள் வீட்டில் இருந்தபடியே செய்வதற்கு ஏற்ற தொழில் இது. நீண்ட நாள் ஸ்டாக் வைத்து விற்கலாம். நல்ல வருமானமும் கிடைக்கும். 



கட்டமைப்பு: இயந்திரங்கள் நிறுவ 10 அடி நீள, அகலத்தில் ஒரு அறை,  தேவையான பேப்பர், உற்பத்தியான பிளேட்களை இருப்பு வைக்க மற்றொரு அறை, 1.5 ஹெச்பி மின் இணைப்பு (ரூ.3 ஆயிரம்). முதலீடு: பேப்பர் பிளேட் இயந்திரம் 1 (ரூ.1.4 லட்சம்),  பேப்பரை 5, 6, 7, 8, 9, 10, 12 ஆகிய இஞ்ச் அளவுகளில் வட்ட வடிவில் வெட்ட பிளேடுகள் மற்றும் அந்த அளவுகளில் பிளேட் செய்வதற்கான டை 7 (ரூ.54 ஆயிரம்) என மொத்தம் முதலீடு ரூ.1.94 லட்சம்.

உற்பத்தி பொருட்கள்: பாலிகோட் ஒயிட் பேப்பர் (திக் ரகம் டன் ரூ.72 ஆயிரம், நைஸ் ரகம் ரூ.40 ஆயிரம்) சில்வர் திக் (டன் ரூ.38 ஆயிரம்), சில்வர் நைஸ் (டன் ரூ.30 ஆயிரம்), புரூட்டி பேப்பர் திக் (டன் ரூ.50 ஆயிரம்), நைஸ் ரகம் (ரூ.38 ஆயிரம்) மற்றும் பேக்கிங் கவர்,  லேபிள், செலோ டேப். கிடைக்கும் இடங்கள்: பேப்பர் பிளேட் மெஷின் சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களிலும், பேப்பர்களில் பாலிகோட் ஒயிட், சில்வர் திக் ஆகியவை சிவகாசி, சில்வர் நைஸ் டெல்லி, புரூட்டி பேப்பர் திக், நைஸ் ஆகியவை கேரளாவிலும் மலிவாக கிடைக்கின்றன. 

உற்பத்தி செலவு: வாடகை, மின்கட்டணம், உற்பத்தி பொருட்கள், கூலி உள்பட பாலிகோட் ஒயிட் 6 இஞ்ச் பேப்பர் பிளேட் தயாரிக்க 20 பைசா, 7 இஞ்ச் தயாரிக்க 45 பைசா, 8 இஞ்ச் 60 பைசா, 10 இஞ்ச் ரூ.1, சில்வர் திக் 8 இஞ்ச் ரூ.1, 10 இஞ்ச் ரூ.1.30, சில்வர் நைஸ் 6 இஞ்ச் 25 பைசா, 7 இஞ்ச் 45 பைசா, புரூட்டி பேப்பர் 8 இஞ்ச் ரூ.1, 10 இஞ்ச் ரூ.1.30 செலவாகிறது. 10 ஆயிரம் பிளேட் தயாரிக்க ஆகும் செலவு ரூ.7700. மாதத்தில் 25 நாளில் 2.5 லட்சம் பிளேட் உற்பத்திக்கு ரூ.1.92 லட்சம் தேவை.

வருவாய்: ஒரு பேப்பர் பிளேட்டுக்கு 20 பைசா லாபம் கிடைப்பதால் தினசரி லாபம் ரூ.2 ஆயிரம். 25 நாளில் ரூ.50 ஆயிரம் லாபம் கிடைக்கும். விற்பனை வாய்ப்பு:  கேட்டரிங் நடத்துபவர்கள், சமையல் ஏஜென்ட்கள், விழாக்கள், அன்னதான நிகழ்ச்சி நடத்துபவர்கள் பேப்பர் பிளேட்களை வாங்குகிறார்கள். அவர்களுக்கு நேரடியாக சப்ளை செய்யலாம். கடைகளுக்கும் சப்ளை செய்யலாம். தரம், குறைந்த லாபம், நேரடி அணுகுமுறை இருந்தால் நிறைய ஆர்டர் கிடைக்கும். 



தயாரிப்பது எப்படி? 


பேப்பர் பிளேட் இயந்திரம் இரண்டு பாகங்களை கொண்டது. ஒன்று கட்டிங் மெஷின், இரண்டாவது பேப்பர் பிளேட் டை மெஷின். இரண்டும் மின்சாரத்தில் இயங்கக் கூடியவை.  தயாரிக்க வேண்டிய பிளேட்டின் அளவுக்குரிய கட்டிங் வளையத்தை கட்டிங் மெஷினில் பொருத்த வேண்டும். கட்டிங் வளையத்துக்கு கீழ் பிளேட்டுக்குரிய பேப்பரை மொத்தமாக வைத்து இயக்கினால் கட்டிங் செய்யப்படும். வட்ட வடிவில் பேப்பர்கள் தனித்தனியாக கிடைக்கும். நைஸ் ரக பேப்பராக இருந்தால் 100 எண்ணிக்கை வரையும் திக் ரகமென்றால் 30 முதல் 40 வரை கட்டிங் செய்யலாம். 

கட் செய்த பேப்பர்களை பிளேட் டை மெஷினில் உள்ள அச்சின் மேல் வைத்து இயக்கினால் பேப்பரின் ஓரங்கள் வளைந்து பிளேட்களாக மாறும். 
பேப்பரை பிளேட்டாக வளைக்க டை மெஷின் 5 டிகிரி வெப்பம் இருக்க வேண்டும். அதற்கு உற்பத்தியை துவக்கும் முன்பு டை மெஷினை 90 டிகிரிக்கு சூடேற்ற வேண்டும். 

நிமிடத்திற்கு 30 பிளேட் தயாராகும். 40 பிளேட்களாக பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி செலோ டேப் ஒட்டி பேக்கிங் செய்ய வேண்டும். இப்போது பேப்பர் பிளேட் விற்பனைக்கு தயார்.

 பேப்பர் பிளேட் இயந்திரங்களை விற்பனையகங்களில் பார்வையிடலாம். அரை மணி நேரத்தில் இயக்குவதை கற்றுக் கொள்ளலாம். எளிய தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் இந்த தொழிலுக்கு மதிப்பு கூடி வருவதால் வங்கிகள் எளிதாக கடன் உதவி வழங்குகின்றன.


பினாயில் தயாரிப்பு


வீடுகள், தொழிற்சாலைகள் என பினாயில் பயன்பாடு இல்லாத இடமே கிடையாது. இவற்றை தரமான முறையில் தயாரித்து விற்றால் நிரந்தர  வாடிக்கையாளர்களை பெற முடியும். அதன் மூலம் வீட்டில் இருந்தபடியே லாபம் சம்பாதிக்க முடியும் என்கிறார் உடுமலை போடிபட்டியை சேர்ந்த இந்திராணி. அவர் கூறியதாவது: 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன புதிதில் கணவரின் வருமானம் போதவில்லை.

பினாயில் தயாரிப்பது குறித்து, இங்குள்ள ஆசிரியர் ஒருவர், பெண்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்தார். அதைக் கற்றுக்கொண்டு, பினாயில் தயாரிப்பை தொழிலாக செய்ய தொடங்கினேன். அப்போது ரூ.100 செலவில் பினாயில் லிக்விட், சென்ட் வாங்கி வீட்டில் உள்ள பாத்திரங்களை கொண்டு பினாயில் தயாரித்தேன். காலி பாட்டில்களில் ஊற்றி,  கடைகளுக்கு விற்றேன். அன்றாட செலவுக்கு பணம்  கிடைத்தது.

பின்னர், தொழிலை சிறிது சிறிதாக விரிவு படுத்தினேன். கணவர் உதவிகரமாக இருந்தார். அவர் பினாயில் பாட்டில் களை சைக்கிளில் எடுத்து சென்று உடுமலையில் உள்ள வீடுகள், மருத்துவமனை கள், ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு விற்றார். பினாயில் லிக்விட் 3 தரத்தில் உள்ளது. முதல் தரத்தை கொண்டு பினாயில் தயாரித்தால் பல மாதங்களுக்கு நீர்த்துப்போகாமலும், காலாவதியாகாமலும் இருக்கும். முதல் தரத்தில் தயாரித்ததால் நிரந்தர வாடிக்கையாளர்கள் கிடைத்தார்கள்.

8 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள நேசக்கரங்கள் அமைப்பு மூலம் ஜான்சிராணி மகளிர் சுய உதவி குழு உருவாக்கி, நிதியுதவி பெற்று, உற்பத்தி அளவை அதிகரித்தேன். மகளிர் குழுவை சேர்ந்தவர்களுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும், கோழிப்பண்ணைகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் சப்ளை செய்கிறேன். வாடிக்கையாளர்கள் விரும்பும் சென்ட்களை பயன்படுத்தி, பிரத்யேகமாக பினாயில் தயாரித்து கொடுத்ததால், மேலும் மேலும் வாடிக்கையாளர்களும் கிடைத்தனர். வாடிக்கையாளர்களை பெறு வதற்காக மேற்கொள்ளும் உற்பத்தி தரத்தை, தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். அதுதான் தொழி லுக்கு நிரந்தர வெற்றியை கொடுக்கும்.

புதிய தொழில் முனைவோர் துவக்கத்தில் குறைந்த அளவில் உற்பத்தி செய்து விற்று, படிப்படியாக உற்பத்தி அளவை அதிகரிக்க வேண்டும். பெண்கள் வீட்டிலேயே பினாயில் தயாரிக்கலாம். இதற்கு பயன்படுத்தும் கெமிக்கல் பின்விளைவுகளை ஏற்படுத்தாது. குடும்பத்தினர் உதவியுடன்  வீடுகள், மருத்துவமனைகள், விடுதிகள், ஓட்டல்களுக்கு நேரடியாக சப்ளை செய்தால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம்.

முதலீடு

20 லிட்டர் வாளி 2 (ரூ.400), கப் 2 (ரூ.60), புனல் 2 (ரூ.30). முதலீட்டு செலவுக்கு ரூ.500 போதும். தயாரிப்பு பொருட்கள் : பினாயில் பேஸ்ட், சென்ட் (மல்லிகை, தாமரை, தாழம்பூ, மரிக்கொழுந்து உள்ளிட்ட வெவ்வேறு மணங்களில் உள்ளன) கெமிக்கல் ஸ்டோர்களில் கிடைக்கிறது. பினாயில் தயாரிக்க தனி இடம் தேவை யில்லை.  மூலப் பொருட் களையும், தயாரித்த பினாயிலையும் வைக்க வீட்டில்  உள்ள ஒரு அலமாரி போது மானது.  பினாயில் தயாரிக்கும் போதும். வெளி யேறும் நெடி அதிகமாக இருக் கும் என்பதால், காற்றோட்டமுள்ள வராண்டாவில் தயாரிப்பது நல்லது. நெடி காற்றில் பறந்துவிடும்.

எப்படி தயாரிப்பது?

பினாயில் லிக்விட் ஒரு லிட்டர், சென்ட் 150 மிலி, நல்ல தண்ணீர் 30 லிட்டர். 20 லிட்டர் கொள்ளளவு உள்ள 2 வாளியை அருகருகில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒன்றில் தண்ணீரை நிரப்ப வேண்டும். மற்றொன்று காலியாக இருக்க வேண்டும். ஒரு கப் எடுத்துக்  கொண்டு, அதில் 30 முதல் 35 மிலி பினாயில் லிக்விட்டை ஊற்ற வேண்டும். மற்றொரு கப்பில் தண்ணீர் எடுத்து இரண்டையும் கலந்து நன்றாக ஆற்ற வேண்டும்.

இந்த கலவையை வாளியில் ஊற்ற வேண்டும். இப்படியே செய்து பினாயில் கலவையை வாளியில் ஊற்றி வர வேண்டும். வாளியில் ஊற்றிய பிறகும் நன்றாக கலக்கி விட வேண்டும். அப்போதுதான் லிக்விடும், தண்ணீரும் கலக்கும். இடையில் மக்கில் 15 மிலி சென்ட் எடுத்து அதில் தண்ணீர் கலந்து நன்றாக கலக்கி வாளியில் ஊற்ற வேண்டும். இவ்வாறு ஒரு லிட்டர் பினாயில் லிக்விட், 150 மில்லி சென்ட், 30 லிட்டர் தண்ணீர் முழுவதையும் கலக்க வேண்டும்.

பிறகு தயாரான  பினாயிலை கப்பில் எடுத்து புனல் வழியாக காலி பாட்டிலில் ஊற்ற வேண்டும். பினாயில் லிக்விட், தண்ணீரோடு முழுமையாக கலக்காவிட்டால் திரிந்து விடும். திரியாமல் நன்று கலப்பதற்காக தான் மாறி, மாறி ஆற்ற வேண்டியது முக்கியம்.

உற்பத்தி செலவு 

ஒரு லிட்டர் பினாயில் லிக்விட், 150 மிலி சென்ட் ஆகியவற்றுடன் 30 லிட்டர் தண்ணீர் கலந்தால் 31 லிட்டர் பினாயில் கிடைக்கும். இதை தயாரிக்க ஒரு மணி நேரம் ஆகும். ஒரு நாளில் 5 லிட்டர் பினாயில் லிக்விட், 750 மில்லி சென்ட் மூலம் 155 லிட்டர் பினாயில் வீதம், மாதத்தில் 25 நாளில் 3875 லிட்டர் பினாயில் தயாரிக்கலாம்.

ஒரு லிட்டர் பினாயில் லிக்விட் ரூ.200, சென்ட் ஒரு லிட்டர் ரூ.1300. மாதம் 25 நாள் உற்பத்திக்கு 125 லிட்டர் பினாயில் லிக்விட் தேவை. ஒரு லிட்டர் ரூ.200 வீதம் ரூ.25 ஆயிரம் தேவை. சென்ட் 18.750 லிட்டர் தேவை. ஒரு லிட்டர் ரூ.1300 வீதம் ரூ.24,375 தேவை. உற்பத்தி மற்றும் டெலிவரி கூலி ஒரு நாளைக்கு ரூ.300 வீதம் 25 நாள் கூலி ரூ.7,500, மினரல் வாட்டர் காலி பாட்டில்கள் தலா 70 காசு வீதம் 3875 காலி பாட்டில்கள் ரூ.2,700. இவ்வாறு ஒரு மாத உற்பத்தி செலவுக்கு ரூ.53,375 தேவை.

மாதம் ரூ.24 ஆயிரம்

ஒரு லிட்டர் பாட்டில் பினாயில்  லிட்டர் தயாரிக்க ரூ.13.75 ஆகிறது. அது ரூ.20க்கும் குறையாமல் விற்கப்படுகிறது. ஒரு லிட்டர் பாட்டிலிலும், 5 லிட்டர், 10 லிட்டர் கேன்களிலும் விற்கப்படுகிறது. கேனுடன் 5 லிட்டர் பினாயில் ரூ.130க்கும், 10 லிட்டர் பினாயில் ரூ.250க்கும் விற்கப்படுகிறது. மாதம் 3875 லிட்டர் விற்பதன் மூலம் ரூ.24 ஆயிரம் லாபம் கிடைக்கும்.

தேவை அதிகம்

பினாயில் லிக்விட் கிருமி நாசினி. அதில் தண்ணீர் கலக்கப்பட்டுள்ளதால், அப்படியே பயன்படுத்தலாம். மேலும் தண்ணீர் கலக்க வேண்டியதில்லை. இதை சுத்தம் செய்யப்பட்ட இடங்களில் தெளித்தால் கிருமிகள் அழியும், சென்ட் கலப்பதால் வாசனையாக இருக்கும். ஈ மொய்க்காது. வீடுகள், ஓட்டல்கள், விடுதிகள், மருத்துவமனைகள், நிறுவனங்கள் என எல்லா இடங்களிலும் அன்றாடம் பயன்படுத்தப்படுவதால், தேவை அதிகம் உள்ளது. தரமான வாசனையுள்ள பினாயில்களுக்கு கிராக்கி உள்ளது. மக்களுக்கு வாடிக்கையாக சப்ளை செய்யலாம். குறைந்த லாபத்தில் கடைகளுக்கும் சப்ளை செய்யலாம்.