நோட்டுப் புத்தகம் தயாரிப்பு
நோட்டுப் புத்தகத்தின் தேவை என்ன என்பதைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பள்ளி, கல்லூரிகள் அலுவலகங்கள், வீடுகள் என எல்லா இடங்களிலும் இதற்கான தேவை இருந்துகொண்டே இருக்கிறது. சாகாவரம் பெற்ற இந்தத் தொழிலைப் பற்றிதான் இந்த வாரம் நாம் பார்க்கப் போகிறோம்...
கம்ப்யூட்டர், லேப்டாப் என தொழில்நுட்பம் பெரிதாக வளர்ந்துவிட்டாலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இன்றும் நோட்டுப் புத்தகங் களில்தான் எழுதி வருகின்றனர். எனவே, எல்.கே.ஜி. முதல் கல்லூரி வரை நோட்டுப் புத்தகங்களுக்கான தேவை இருந்து கொண்டே இருக்கிறது. குழந்தைகளுக்குப் பாடங்கள் அதிகமாக ஆக, நோட்டு களுக்கான தேவையும் எதிர்காலத்தில் இருந்து கொண்டே இருக்கும். பள்ளி, கல்லூரிகளை நேரடியாக அணுகி, ஆர்டர் பெறுவதன் மூலம் நோட்டுக்களை விற்கலாம். அல்லது உரிய டீலர் மூலம் கடைகளில் சப்ளை செய்துவிடலாம். நோட்டு தயாரிப்பின்போது மீதமாகும் கட்டிங் வேஸ்டுகளை மறுசுழற்சி முறையில் இரண்டாம் தர நோட்டுகளைத் தயார் செய்பவர்களுக்கு விற்பனை செய்யலாம்.
இயந்திரம்!
கட்டிங் மெஷின்!
பிரின்டிங் மெஷின்!
நிலம் மற்றும் கட்டடம்!
இந்தத் தொழில் தொடங்க 1,000 முதல் 1,500 சதுர அடி வரை இடம் தேவை. இதில், குறைந்தது 750 சதுர அடி அளவில் கட்டடம் இருக்க வேண்டும்.
மூலப் பொருள்!
நோட்டுப் புத்தகம் தயாரிக்கத் தேவைப்படும் பேப்பர் சுருள் வடிவிலும், பெரிய ஷீட் வடிவிலும் கிடைக்கிறது. கிலோ கணக்கில் கிடைக்கும் இந்த மூலப் பொருளின் விலை கல்வி ஆண்டின் ஆரம்ப காலத்தில் அதிகமாகவும், பின்னர் ஆறு மாதம் குறைவாகவும் இருக்கும். பொதுவாக கிலோ 52-55 ரூபாய் வரையில் கிடைக்கிறது. இந்த மூலப் பொருட்கள் டி.என்.பி.எல்., எஸ்.பி.பி. போன்ற கம்பெனிகளிடம் கிடைக்கிறது.
இயந்திரம்!
மூலப் பொருள் தொடங்கி நோட்டுக்களாக மாறுகிற வரை மொத்தம் ஐந்து இயந்திரங்கள் தேவை. ரூலிங் மெஷின், பைண்டிங்க் மெஷின், கட்டிங் மெஷின், பின்னிங் மெஷின் மற்றும் பிரின்டிங் மெஷின் என்கிற இந்த ஐந்து இயந்திரங்களை வாங்க மொத்தம் 14 லட்சம் ரூபாய் வேண்டும். இதில், முதல் நான்கு இயந்திரங்களும் கேரளா மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களில் கிடைக்கின்றன. பிரின்டிங் இயந்திரம் இங்கு கிடைத்தாலும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது நல்லது. இந்த பிரின்டிங் மெஷினை தேவைப்பட்டால் மட்டுமே வாங்கிக் கொள்ளலாம். அட்டையில் படங்களையும் எழுத்துக்களையும் பிரின்ட் செய்வதற்காகவே இந்த மெஷின். ஏற்கெனவே பிரின்ட் செய்யப்பட்ட அட்டைகள் சந்தையில் கிடைப்பதால், அதை வாங்கி, நோட்டுடன் பைண்ட் செய்து தந்துவிடலாம். தவிர, இந்த மெஷினின் விலையும் அதிகம். பிரின்டிங் இயந்திரத்துடன் சேர்த்து இந்தத் தொழில் தொடங்குவதற்கு இருபது லட்ச ரூபாய்க்கு மேல் தேவைப்படும்.
தயாரிப்பு முறை!
நோட்டுப் புத்தகங்கள் இரண்டு வகையாகத் தயாரிக்கப்படுகிறது. 40-90 பக்கம் கொண்ட நோட்டு புத்தகம் ஒரு வகை. 192-400 வரையிலான பக்கங்களைக் கொண்ட நோட்டுப் புத்தகம் மற்றொரு வகை. இந்த இரண்டு வகையைப் பொறுத்தே தயாரிப்பு வேலைகள் மாறும்.
ரூலிங் மெஷின்!
இந்த மெஷினில் பேப்பரை வைத்து நமது தேவைக்கேற்ப நோட்டுப் புத்தகத்தில் வரிகளைப் போட பயன்படு கிறது. இந்த மெஷின் முதலில் மார்ஜின் லைனும், பின்னர் தேவையான வரிகளையும் போடுகிறது. இந்த வேலை செய்ய இரண்டு ஆட்கள் தேவைப்படுவார்கள். இப்படி வரிகளுடன் அச்சாகி வரும் பேப்பர்கள் எண்ணப்பட்டு தனியாக வைக்கப்படும். அன்ரூல்டு நோட்புக்கை மட்டுமே தயாரிப்பவர்களுக்கு இந்த மெஷின் தேவையிருக்காது.
கட்டிங் மெஷின்!
எண்ணப்பட்ட பேப்பர்கள் தேவைப்படும் அளவுக்கு ஏற்ப வெட்டப்படுகிறது. சின்ன நோட்டு, பெரிய நோட்டு என்று தேவைப்படும் அளவுகளில் வெட்டிக் கொள்ளலாம். இந்த வேலையினைச் செய்ய இரண்டு ஆட்கள் தேவை.
பின்னிங் மெஷின்!
வெட்டப்பட்ட பக்கங்கள் பின்னிங் மெஷின் மூலம் பின் அடிக்கப்படுகிறது. இந்த வேலையைச் செய்ய மூன்று பேர் தேவைப்படுவார்கள். பின் அடிக்கப்பட்ட நோட்டுகள் கட்டிங் மெஷின் மூலம் வெட்டுகிறார்கள்.
பைண்டிங் மெஷின்!
இப்படி வெட்டப்பட்டு வருகிற பெரிய நோட்டுகளில் வெளிப்பக்கமாக அட்டை வைத்து 300 செல்சியஸ் அளவுக்கு சூடாக்கப்பட்ட பசையை (நிuனீ) கொண்டு ஒட்டுகிறார்கள். இந்த வேலையைச் செய்ய மூன்று பேர் தேவை. பின்னர் மீண்டும் கட்டிங் மெஷினில் வைத்து பிசிறில்லாமல் சீராக வெட்டி சரி செய்கிறார்கள்.
பிரின்டிங் மெஷின்!
இந்த மெஷின் மூலம்தான் நோட்டின் அட்டைகள் பிரின்ட் செய்யப்படுகிறது. இந்த மெஷினைக் கொண்டு முகப்பு அட்டையில் வேண்டிய டிசைன் அல்லது படங்களை பிரின்ட் செய்து கொள்ளலாம். இந்த மெஷினை புத்தகங்களை அச்சடிக்கவும், வேறு பல பிரின்டிங் வேலை செய்யவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மைனஸ் :
இந்தத் தொழிலைப் பொறுத்தவரை மே மாதம் தொடங்கி ஆறு மாதம் வேலை இருக்கும். அடுத்துவரும் சில மாதங்களுக்குப் பெரிதாக வேலை இருக்காது. இதுதான் இந்தத் தொழிலில் இருக்கும் பாதகம். தவிர, தொழில் நன்றாக இருக்கும்போது மூலப் பொருளின் விலை உச்சத்தில் இருக்கும் என்பதும் பாதகமான விஷயமே.
பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதால், தயாரித்த நோட்டுக்கள் விற்க முடியாத நிலை நிச்சயம் உருவாகாது. எனவே, புதுப்புது யுக்திகளைப் பயன்படுத்தி குழந்தைகளை ஈர்த்தால் இந்தத் தொழிலில் நிச்சயம் வெற்றிதான்!
- பானுமதி அருணாசலம், அ.முகமது சுலைமான்.
படங்கள் : ச.இரா. ஸ்ரீதர்
படங்கள் : ச.இரா. ஸ்ரீதர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக