சாதிக்கும் கல்லூரி மாணவர்கள்!
இரண்டு பார்ட்னர்கள் இருந்தாலே பிசினஸில் பல பிரச்னைகள் வர, சென்னையில் பல கல்லூரிகளைச் சேர்ந்த 16 மாணவர்கள் சேர்ந்து ஈவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியை (Event Management Company) நடத்தி வருகிறார்கள்.
இளவயதில் ஈகோவுக்கு அதிக முக்கியத்துவம் தருகிற பருவத்தில் எப்படி இது சாத்தியம் என இந்த கம்பெனியைத் தொடங்கிய ராகவேந்திரா கூறியது
''ஒரு சராசரியான மாணவனின் வாழ்க்கையை நான் விரும்பவில்லை. புதிதாக ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே எனக்குள் ஓடிக்கொண்டேதான் இருக்கும். 12-ம் வகுப்பு முடித்தவுடன் கிண்டி பொறியியல் கல்லூரியில் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பைத் தேர்வு செய்தேன். கல்லூரியில் சேர்ந்தவுடன் எனக்குள் இருந்த எண்ண ஓட்டம் அதிகமானது. என் நண்பர்கள் வினீத் ரமேஷ் மற்றும் ஸ்ருதன்ஜெய் நாராயண் ஆகிய இருவரிடமும் இந்த எண்ணம் இருந்தது. எனவே, நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து ஒரு தொழில் செய்ய முடிவெடுத்தோம்.
சென்னையில் நிகழ்ச்சிகளுக்குப் பஞ்சம் இல்லை. மாதந்தோறும் ஏதாவது நிகழ்ச்சிகளும் விழாக்களும் நடந்துகொண்டேதான் இருக்கிறது. ஏன் ஒரு நிகழ்ச்சியை நடத்தித் தரும் கம்பெனியை நடத்தக்கூடாது என்ற எண்ணம் எங்கள் மூன்று பேரிடமும் தோன்றியது. உடனடியாக நாங்கள் மூன்றுபேரும் சேர்ந்து 'அயாமரா’ என்ற பெயரில் நிகழ்ச்சிகள் நடத்தும் கம்பெனியை தொடங்கினோம்.
ஒரு நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தவும் திட்டமிடவும் நாங்கள் மூன்று பேர் மட்டும் போதுமானதாகத் தெரியவில்லை. எனவே, எங்கள் புதுமுயற்சிக்கு வலுசேர்க்க பல கல்லூரிகளிலிருந்து சகமாணவர்களைச் சேர்த்துக்கொண்டோம். ஆகஸ்ட் 2012-ல் சென்னையில் 'மெட்ராஸ் டே’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. துப்புகளை வைத்துக்கொண்டு காரின் மூலம் இடங்களைக் கண்டுபிடிக்கும் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி அது.
எங்கள் கம்பெனியைப் பற்றி கேள்விப்பட்ட அந்த அமைப்பினர் எங்களை இந்த நிகழ்ச்சியை நடத்தித் தருமாறு கேட்டனர். அதற்கான பணத்தையும் முன்கூட்டியே கொடுத்தனர்.
நாங்கள் மொத்தம் 16 பேர். கம்ப்யூட்டர் சயின்ஸ், பொருளாதாரம், உளவியல் எனப் பல துறைகளில் படித்துக்கொண்டிருந்தோம். இதுவே எங்களை ஒரு நிகழ்ச்சியைப் பலகோணத்தில் திட்டமிட மிகவும் உதவியாக இருந்தது. அதனால் நிகழ்ச்சிக்கான சிறு சிறு விஷயங்களிலும் நாங்கள் கவனம் செலுத்தினோம். எங்களுக்கு அப்போது போதுமான அனுபவம் இல்லை என்றாலும் வெற்றிகரமாக அந்த நிகழ்ச்சியை நடத்தித் தந்தோம். இந்த நிகழ்ச்சி மூலம் பொருளாதார ரீதியாகச் சம்பாதித்த லாபம் வெறும் நூறு ரூபாய்தான். ஆனால், நாங்கள் சம்பாதித்த பெயருக்கும் புகழுக்கும் அளவில்லை. இந்த நிகழ்ச்சியால் எங்கள் நிறுவனம் மக்கள் அனைவரிடமும் போய்ச்சேர்ந்தது.
முதல் நிகழ்ச்சி வெற்றிகரமாக முடித்தபிறகு பலபேர் எங்களைத் தொடர்புகொண்டு தங்கள் நிகழ்ச்சிகளையும் நடத்தித் தருமாறு கேட்டனர். எல்லா நிகழ்ச்சிகளையும் நடத்திக்கொடுக்காமல் நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுப்பதில் மிகக் கவனமாக இருப்போம். 16 பேருக்கும் முழுச் சம்மதம் இருந்தால்தான் அந்த நிகழ்ச்சியைப் புக் செய்து நடத்தித் தருவோம். நிகழ்ச்சிக்கான மார்க்கெட்டிங்கில் ஆரம்பித்து டிக்கெட் புக்கிங் வரை அனைத்து வேலைகளையும் நாங்களே பார்த்துக்கொள்வோம்' என்றார் ராகவேந்திரா.
சதீஷ்பாபு என்பவர் பேசும்போது 'கம்பெனியைப் பொறுத்தவரை, நாங்கள் 16 பேரும் பார்ட்னர்கள்தான். முதலாளி, தொழிலாளி என்ற பாகுபாடு எங்களிடம் இல்லை. வரும் லாபத்தை இதுவரை யாரும் பிரித்துக்கொள்ளவில்லை; கம்பெனியின் வளர்ச்சிக்காகவே இன்றுவரை பயன்படுத்தி வருகிறோம். சொந்தமாக ஒரு மிகப் பெரிய நிகழ்ச்சியை நடத்துவதே எங்களது தற்போதைய எண்ணம். அதற்காகத்தான் இப்போது உழைத்து வருகிறோம்' என்றார்.
இந்தக் குழுவின் பெண் உறுப்பினர் காயத்ரி பட்டானி. அவருடன் பேசினோம். 'நான் டபிள்யூசிசி கல்லூரியில் உளவியல் மூன்றாமாண்டு படித்து வருகிறேன். குழுவாகச் சேர்ந்து பணியாற்றும்போது, புதிய புதிய விஷயங்களை எங்களால் கற்றுக்கொள்ள முடிகிறது. தொழில் ரீதியான அனுபவங்கள் எங்களுக்கு நடைமுறை வாழ்வியலை கற்றுத் தருகின்றன. ஆரம்பத்தில் தடுமாறினாலும் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் தவறுகளைத் திருத்திக்கொண்டு முன்னேறி வருகிறோம்'' என்றார் அவர்.
இந்த நிறுவனத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் திருவேங்கடம். அவர், ''கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, சுயமாகத் தொழில் ஆரம்பித்தாலும் அல்லது ஒரு நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்றாலும் அங்கு எப்படி நடந்துகொள்ள வேண்டும், தொழில்ரீதியாக ஏற்படும் இடர்பாடுகளை எப்படிச் சமாளிக்கவேண்டும் என்று எங்களின் நிறுவனம் எங்களுக்குக் கற்றுக்கொடுத்துள்ளது.
எங்களின் கல்லூரிப் பருவத்திலேயே இதுமாதிரி அனுபவங்கள் எங்களுக்குக் கிடைத்திருப்பது பெரிய வரப்பிரசாதம்தான்'' என்றார்.
மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட் படிக்கும் ஸ்நேஹா பாலசுப்ரமணியம், ''என்னுடைய படிப்புச் சார்ந்த தொழில் என்பதால்தான் நான் இதற்குச் சம்மதித்தேன். இதில் இணைந்ததும்தான் மற்ற நண்பர்களின் ஆர்வம் எனக்குப் புலப்பட்டது.
எங்கள் கம்பெனியை உலக அளவில் பிரபலப்படுத்த வேண்டும் என்பதே அனைவருக்குமான சிந்தனையாக இருக்கிறது. படிப்பதற்கும், அதையே பிராக்டிக்கலாக செய்வதற்குமான வேறுபாடுகளை இந்த பிசினஸ் செய்வதன் மூலம் கற்றுக்கொண்டேன்'' என்றார் நம்பிக்கையாக.
டி.எம்.ராஜரத்தினம் மஹால், மியூசிக் அகாடமி, ஜெர்மன் ஹால் ஆகிய இடங்களில் பல நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கும் இந்த ஜாம்பவான்கள், பாலிவுட் பிரபலமான ஃப்ரஹான் அக்தரின் இசை நிகழ்ச்சியையும் கடந்த டிசம்பர் மாதம் நடத்தி அசத்தியுள்ளனர். பதினாறு பேரும் தங்களின் பிசினஸ் வெற்றிக்கு பின்னணி, தங்கள் பெற்றோர்கள் தரும் ஊக்கம்தான் என்கிறார்கள் கோரஸாக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக