இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.
blogger templatesBlogger Tips and TricksFetured Content Slider
பிசினஸ் டெக்னிக்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிசினஸ் டெக்னிக்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 7 மே, 2014

மாத்தி யோசிக்கும் பிசினஸ்மேன்கள்! - வெற்றிக்கு வித்திடும் வித்தியாசமான சூழல்கள்

ஒரு தொழில் ஓஹோவென வளர்வதற்கு முக்கியமான தேவை, அந்தத் தொழில் மூலம் கஸ்டமர்களுக்குக் கிடைக்கும் வித்தியாசமான அனுபவம்தான். இந்த அனுபவம் மட்டும் ஒரு கஸ்டமருக்கு பிடித்துப்போய்விட்டால், அந்த கஸ்டமர் அந்த நிறுவனத்தைத் தேடி அடிக்கடி வருவார் என்பதே பிசினஸ் ரகசியம். சென்னையில் வித்தியாசமான சூழலைத் தரும் சில நிறுவனங்களை தேடிப்போய், அந்தச் சூழலை உருவாக்கும் ஐடியா எப்படி பிறந்தது என்று விசாரித்தோம். நாங்கள் முதலில் கோடம்பாக்கத்தில் உள்ள டவுன்பஸ் ஹோட்டலுக்குச் சென்றோம்.
கோடம்பாக்கத்தின் அடையாளம்!
பெயருக்கேற்ப முழு ஹோட்டலை யும் டவுன்பஸ் வடிவத்தில் அமைத்திருக்கிறார்கள். உண்மையான பஸ் போன்றே சக்கரம், கண்ணாடி ஜன்னல், சைடுமிரர் என்று இருக்கிறது வெளிப்புறம். அப்படியே உள்ளே சென்றால் பஸ்ஸில் உள்ளது போன்றே உட்காரும் சேர் உள்ளது. வெளியே காத்திருக்கும் இடத்தில் உள்ள சேர்களும் இதே வடிவம்தான். மேற்புறத்தில் கைபிடி கம்பிகளையும் பஸ்ஸில் உள்ளதுபோன்றே இரண்டு வரிசைகளில் டேபிள்களையும் அமைத்திருக்கிறார்கள். சாப்பாடு மெனுவில்கூட 'டவுன்பஸ் சூப்பர் ஃபாஸ்ட்’, 'டவுன்பஸ் எல்.எஸ்.எஸ் ஸ்பெஷல்’ என வெரைட்டியான உணவு வகைகளைத் தருகிறார்கள்.
டவுன் பஸ் ஹோட்டலின் உரிமையாளர் வேலுவிடம் பேசினோம். ''எங்க அப்பா ஏகநாதன் பல்லவன் பஸ் சர்வீஸில் டிரைவராக வேலை பார்த்து ரிட்டையர் ஆனவர். 2008-ம் ஆண்டு ஹோட்டல் ஆரம்பிக்கலாம் என யோசித்தபோது எங்க அப்பாதான், 'இந்தமாதிரி பஸ் வடிவத்தில் அமைத்தால் வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். என்னுடைய டிரைவர் வேலைக்கும் அடையாளமாக இருக்கும்’ எனச் சொன்னார். அவரது  விருப்பப்படியே இந்த ஹோட்டலை அமைத்தேன்.
கஸ்டமர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஹோட்டலை இப்படி வித்தியாசமாக வடிவமைத்தபோது அதுவே எங்களுக்கு ஒரு பெரிய விளம்பரமாக மாறியது. எங்கள் கடை கோடம்பாக்கத்தின் அடையாளமாகத் திகழ்வது எங்களுக்கு கிடைத்த அங்கீகாரம்தான்'' என்று பெருமிதத்துடன் சொன்னார்.
வித்தியாசமான முகப்புகள்!
அடுத்து, நாங்கள் சென்றது போத்தீஸ் ஜவுளிக் கடைக்கு. போத்தீஸின் ஸ்பெஷாலிட்டியே பண்டிகைகள் மற்றும் பருவகாலத்துக்கேற்ப கடையின் இன்டீரியர்களை மாற்றுவது மற்றும் கடையின் முகப்பில் வித்தியாசம் காட்டுவதும்தான். இதன்மூலம் தங்களது கடையைத் தேடிவரும் வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது இந்த நிறுவனம். தீபாவளி, சம்மர் கொண்டாட்டம், கிறிஸ்துமஸ், நியூ இயர் மற்றும் ஆடித் தள்ளுபடி என ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்ப முகப்புத் தோற்றத்தையும் உள்ளே இருக்கும் இன்டீரியர் டிசைனையும் இந்த நிறுவனம் மாற்றத் தவறுவதில்லை.
அதிலும் குறிப்பாக, சம்மர் சீஸனில் பசுமை கொண்டாட்டம் என்ற பெயரில் இந்த நிறுவனம் அமைக்கும் மாற்றங்களை மக்கள் கவனிக்காமல் இருக்க முடிவதில்லை. கடையின் முன்புறம் செடிகளை வளைவாக அமைக்கிறார்கள். வாடிக்கையாளர் களுக்கு இலவச மரக்கன்றுகள், உள்ளே வருபவர்களுக்கு குடிக்க மோர், லஸ்சி போன்றவற்றைத் தருகிறார்கள்.
இதுபற்றி போத்தீஸின் விளம்பரப் பிரிவு மேனேஜர் ஆரோக்கியராஜுடன் பேசினோம். ''ஒவ்வொரு சீஸனுக்கேற்ப இப்படி ஏதாவது வித்தியாசமாக செய்வதால், வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர முடிகிறது. இந்த வித்தியாசமான அனுபவத்துக்காகவே எங்கள் கடையைத் தேடிவரும் வாடிக்கையாளர்கள் பலர்'' என்றார் அவர்.
திகில் தரும் ராக்!
'தி ராக் ரெஸ்டாரன்ட்’ - சென்னை, தேனாம்பேட்டையில் இருக்கும் இந்த ஹோட்டலின் நுழைவு வாயிலை குகை வடிவத்தில் அமைத்திருக்கிறார்கள். கதவு ஒரு மனித குரங்கு பொம்மை மாதிரி இருக்கிறது. உள்ளே சென்றால், ஏதோ ஒரு காட்டுக்குள் நுழைந்துவிட்ட மாதிரி ஓர் அனுபவம்.  குறுகலான பாதைகள், ஆதிமனிதனின் சிலைகள், தீப்பந்தம் போன்ற லைட்கள், சுற்றிலும் பாறைகளைச் செதுக்கியது போன்ற அமைப்பு, இருட்டறைகள், மரத்தூண்கள் என வித்தியாசமான சூழலை அனுபவிக்க முடிகிறது. இங்கே கிடைக்கும் உணவுப்பொருட்களும் இப்படி வித்தியாசமாக இருக்குமோ என்று கேட்டால், அப்படி எல்லாம் இல்லை; எல்லா உணவுவகைளும் எங்களிடம் கிடைக்கும் என்கிறார்கள் இங்கு பணிபுரியும் ஊழியர்கள்.
இந்த ஹோட்டலின் மேனேஜர் ரவிச்சந்திரனுடன் பேசினோம். ''2009-ம் ஆண்டு இதன் உரிமையாளர் கலைவாணன் மற்ற ரெஸ்டாரன்ட்கள் மாதிரி அல்லாமல் வாடிக்கையாளர்களைக் கவருகிற மாதிரி புது ஹோட்டல் ஒன்றை ஆரம்பிக்க நினைத்தபோது இப்படி அமைக்க முடிவெடுத்தார். வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் திருப்தியை விளம்பரமாக்குவது தொழில் வளர்ச்சிக்கு உதவும் என்று எண்ணினோம். இதை அமைப்பதற்குக் கொஞ்சம் செலவு அதிகம்தான். ஆனாலும், வருகிற வருமானத்துக்குக் குறையில்லை. நாங்கள் வித்தியாசமாக அமைத்திருக்கும் சூழ்நிலை எங்களது கஸ்டமர்களுக்குப் பிடித்துப்போகவே, சென்னையில் ஆறு இடங்களில் இதேமாதிரி கிளைகளை வடிவமைத் திருக்கிறோம்'' என்றார்.
கஸ்டமர்கள்தான் முதுகெலும்பு!
வித்தியாசமான சூழலை உருவாக்கி வெற்றிகரமாக பிசினஸ் செய்துவரும் நிறுவனங்கள் பற்றி பிராண்ட்காம் நிறுவனத்தின் சிஇஓ-வான ராமானுஜம் ஸ்ரீதரிடம் கேட்டோம். ''ஒரு நிறுவனம் வெற்றிகரமாக நடக்கவேண்டுமெனில், இந்த வித்தியாசமான அணுகுமுறை கட்டாயம் வேண்டும். இதுவே அந்த நிறுவனத்துக்கு வெற்றி தேடித்தரும் விளம்பரமாகவும் அமையும். வித்தியாசமான சூழலை அமைத்துத் தரும்போது அது வெறும் விளம்பர உத்தியாக மட்டும் இல்லாமல், கஸ்டமர்களுக்கு திருப்தி தருகிறமாதிரி இருப்பது நல்லது.
வித்தியாசம் காட்டும் மருத்துவமனை!
இதற்கு பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையை உதாரணமாக சொல்வேன். பொதுவாக, மருத்துவமனையில் ஐசியூ வார்டுகளை மற்றவர்களுக்குத் தெரியாதபடி அமைத்திருப்பார்கள். ஆனால், இந்த மருத்துவமனையில் மட்டும் ஐசியூ வார்டில் இருப்பவருடைய நன்மைக்காகவும், அவரது உறவினர்களின் திருப்திக்காகவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும்படி, ஐசியூ வார்டு  அமைத்திருக்கிறார்கள். இதனால் நோயாளிக்கு உறவினர்களைப் பார்க்க முடியவில்லை என்கிற கவலை இல்லை. இதனால் நோயாளிகளும் அவர்களை பார்க்க வருகிறவர்களும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
யதார்த்தமாக இருக்க வேண்டும்!
இப்படி வித்தியாசமான சூழலை உருவாக்கும்போது கஸ்டமர்கள் முகம் சுழிக்கிறமாதிரி எதையும் செய்துவிடக் கூடாது. நமது வாழ்க்கையின் யதார்த்தமான விஷயங்கள் கஸ்டமர்களுக்கு நினைவூட்டுகிற மாதிரி இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, வித்தியாசம் என்கிற பெயரில் கட்டாந்தரையில் உட்கார்ந்து சாப்பிடச் சொன்னால், பலருக்கும் அது சங்கடமான அனுபவமாகவே இருக்கும்.
ஆனால், கஸ்டமர்களின் மனத்தில் தைக்கிறமாதிரியான மாற்றங்களைக் கொண்டுவரும்போது, அதுவே அந்த நிறுவனத்துக்கு பெயர் பெற்றுத்தரும் விளம்பரமாக மாறிவிடுகிறது. அதன்பிறகு அந்த நிறுவனம் விளம்பரத்துக்காக பெரிதாக செலவு எதுவும் செய்ய வேண்டியதில்லை.
தொழில் செய்பவர்கள் கவனத்துக்கு!
வித்தியாசமான சூழலைத் தருகிறோம் என விளம்பரம் செய்துவிட்டு, அதைப் பார்த்து கஸ்டமர்கள் கடையைத் தேடிவந்தால், அவர்களை சிறப்பாக கவனிக்க வேண்டும். அப்போதுதான் சிறிய அளவிலான கடை என்றாலும் அங்கு தனக்குக் கிடைத்த அனுபவத்தைப் பற்றி சாதாரணமாக இன்னொருவருடன் பேசும்போதும், சமூக வலைதளங்களிலும் பதிவு செய்வார்கள் கஸ்டமர்கள்.
மோசமான அனுபவமாக இருந்தால், அதையும் மறக்காமல் மற்றவர்களிடம் சொல்லி, சமூக வலைதளங்களிலும் பதிவு செய்து, வரநினைக்கிற ஒன்றிரண்டு கஸ்டமர்களையும் வராமல் தடுத்துவிடுவார்கள். எனவே, வெறும் வடிவமைப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல், கஸ்டமர்களை உபசரிப்பதிலும் கவனம் காட்டினால்தான் உங்கள் ஸ்மார்ட் ஐடியா நிச்சயம் வெற்றி பெறும்'' என்றார் அவர்.
தொழிலில் ஜெயிக்க நினைப்பவர்கள் இந்த விதத்தில் யோசித்து வெற்றி 

ஞாயிறு, 23 மார்ச், 2014

விற்பனைக்கு கைகொடுக்கும்... வியாபார வலைதளம்!

பிட் நோட்டீஸை விநியோகித்து பிசினஸை வளர்த்தது அந்தக் காலம். சிறு நிறுவனமாக இருந்தாலும் அதை வெப்சைட் (Website) மூலம், அதாவது வலைதளங்களின் மூலம் உலகம் முழுக்கக் கொண்டுசெல்வது இந்தக் காலம். வெப்சைட்டை சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் பிசினஸில் நல்ல லாபம் பார்க்க முடியும் என்கிற நிலையில், நாம் செய்துவரும் தொழிலுக்கான வெப்சைட்டை எப்படித் தொடங்குவது? ஆரம்பித்தபிறகு அதை எப்படிக் கையாள்வது, வெப்சைட்களின் மூலம் வாடிக்கையாளர்களை எப்படித் தக்கவைத்துக்கொள்வது என்கிற கேள்விகளுக்கு விரிவான விளக்கம் தந்தார் பாரத் மேட்ரிமோனி நிறுவனத்தின் சமூக வலைதளங் களுக்கான பிரிவின் தலைவர் கே.எஸ்.ராஜசேகர்.
உங்களுக்கென ஒரு வெப்சைட்டை  உருவாக்கும்போது நம்பகமான டொமைன் பதிவாளர்களை அணுக வேண்டும். முதலில், வெப்சைட் ஹோஸ்டிங் (தங்களுக்குத் தேவையான வெப்சைட்டை டிசைன் செய்யும் முறை) செய்ய யாஹூ ஸ்மால் பிசினஸ், சென்னை ஆன்லைன் மற்றும் வேர்டுபிரஸ் ஹோஸ்டிங் வலைதளங்களை அணுகலாம்.

பாலமாகச் செயல்படுகின்றன!
''பிசினஸ் வெப்சைட்கள் வியாபாரத்துக்கும் வாடிக்கையாளர் களுக்கும் இடையே பாலமாகச் செயல்படுகின்றன. தொழில் செய்துவருகிறவர்களில் பெரும்பாலானவர்கள் இதுகுறித்த தொழில்நுட்ப அறிவு தங்களுக்கு இல்லை என்பதால் இந்தப்பக்கமே வராமல் இருக்கிறார்கள்.
ஆனால், இன்றைய நிலையில், வெப்சைட் தொடங்குவதற்குப் பெரிய அளவில் டெக்னிக்கல் விஷயங்கள் தெரிந்திருக்கவேண்டிய அவசியமில்லை.
சரியான தேர்வு முக்கியம்!
இந்த வலைதளங்களே டெக்னிக் சார்ந்த அத்தனை விஷயங்களையும் பார்த்துக்கொள்கின்றன. வெப் ஹோஸ்டிங் செய்ய ஒரு மாதத்துக்கு 250 ரூபாய்க் கட்டணமாக வசூலிக்கப்படும்.
வெப்சைட் வடிவமைப்பு செய்யும்முன்..!
எதற்காக இந்த வெப்சைட் வடிவமைக்கிறோம் (பொருட்களை விற்பதற்காகவா, புதிய வாடிக்கையாளர் களைக் கவர்வதற்காகவா, தொழிலை வளர்த்துக்கொள்வதற்காகவா) என்பதில் தெளிவாக இருக்கவேண்டும்.
அவரவர்களின் தொழில் சார்ந்த மற்ற வெப்சைட்டைப் பார்த்து எது தேவை, எது தேவையில்லை என்பதைத் தெரிந்து வைத்துக்கொண்டு, அதன்பின்னர் நமக்கான வெப்சைட்டை  வடிவமைப்பது நல்லது.
வெப்சைட் வடிவமைப்பின்போது..!
வெப்சைட்டை வடிவமைக்கும் போது டொமைன் பெயரை (உதா: www.tamilnews.com) தேர்வு செய்வதுதான் மிக முக்கியம். இந்த டொமைன் பெயர் வாடிக்கையாளர்கள் எளிதில் நினைவில் வைத்திருக்கும்படி, தொழில் சார்ந்த வார்த்தையாக (மக்களிடம் அதிகம் பயன்படுத்தும் வார்த்தை), ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளை மட்டுமே கொண்டதாக இருக்க வேண்டும். இரண்டு வார்த்தைகள் என்றால் அவை இணைந்தே இருக்க வேண்டும். இரண்டுக்கும் இடையில் சிறப்புக் குறியீடுகளோ எண்களோ இடம்பெறக் கூடாது.
டொமைன் பெயரை தேர்வு செய்து பதிவு செய்ய ஆரம்பக் கட்டணமாக ரூ.600 வசூலிக்கப்படும். டிமாண்ட் கொண்ட டொமைன் பெயர்களுக்கு ஏற்றபடி கட்டணங்கள் மாறுபடலாம். டொமைன் பதிவாளர்களைத் தேர்வு செய்யும்போது மிக எச்சரிக்கையுடன், நம்பகமான ஆட்களையே தேர்வு செய்யவேண்டும்.
வெப்சைட்களில் போடும் தகவல்கள் (தமிழ், ஆங்கிலம் எதுவாக இருந்தாலும்) தெளிவாக இருக்க வேண்டும். வெப்சைட் குறித்தும், அதனை நிர்வகிப்பவர் குறித்தும், உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் குறித்த விவரம், சலுகை விவரம் மற்றும் வாடிக்கையாளர் சேவை குறித்த விவரம் போன்றவற்றை வலைதளங்களில் தரும்போது வாடிக்கையாளர்களிடமிருந்து முழுமையான நம்பிக்கையைப் பெற முடியும்.
வெப்சைட்களை வடிவமைக்கும் போது, அதிலேயே பொருட்களை ஆர்டர் செய்து வாங்கும்படியான 'பே கேட்வே’ (Pay gateway)  ஆப்ஷன் இருக்கிறமாதிரி பார்த்துக்கொள்வது அவசியம்.
இன்றைய நிலையில் ஸ்மார்ட் போன்களில் வெப்சைட்களைப் பார்க்கிறவர்கள் அதிகம் இருப்பதால், அதற்கேற்றமாதிரி தயார் செய்ய வேண்டும்.
வடிமைக்கும் வலைதளத்தை 5-10 ஆண்டுகள் வரையாவது பதிவு செய்யவேண்டும். இதற்குக் குறைவாகப் பதிவு செய்யும்பட்சத்தில் அந்த வெப்சைட்டின் மீது வாடிக்கையாளர் களும், ரேட்டிங் ஏஜென்சிகளும் நம்பிக்கை இழக்கலாம்.
வெப்சைட் வடிவமைத்தபிறகு..!
வெப்சைட்களை உருவாக்கியபிறகு அதை உடனே 'லோக்கல் லிஸ்ட்டிங் சர்வீஸ்’-க்கு (உதா: கூகுள் லோக்கல், யாஹூ லோக்கல், பிங்க் (Bing)) சென்று பதிவுசெய்ய வேண்டும். அதேபோல கிளாஸிஃபைடு சைட்களிலும் வெப்சைட் பெயர்களைப் பதிவு செய்வது அவசியம். லோக்கல் லிஸ்ட்டிங் மற்றும் கிளாஸிஃபைடு சைட்கள்தான் வாடிக்கையாளர்கள் தேடும்போது யார் வெப்சைட்களை லிஸ்ட் செய்திருக்கிறார்களோ, அதையே முதலில் காட்டும்.
புதுமையைத்தான் அனைவரும் விரும்புகின்றனர். அடிக்கடி புதிய தகவல்களைக் கொண்டு உங்கள் இணையதளத்தைப் புதுப்பித்துக்கொண்டே இருப்பது அவசியம்.  முழுமையாக மாற்றாமல், சிறு  மாற்றங்களைச் செய்தாலே போதும்.
வெப்சைட் உருவாக்கியபிறகு அதைக் கட்டாயம் விளம்பரப்படுத்தியே ஆக வேண்டும். உங்களது பிசினஸ் கார்டுகளில் (விசிட்டிங் கார்டு) அச்சிட்டுக்கொள்வதன் மூலம், வெப்சைட் பெயரில் இ-மெயில் ஐடி-ஐ உருவாக்கிக்கொள்வதன் மூலம், சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்துவதன் மூலம் அதைச் சாத்தியப்படுத்தலாம்.
வாடிக்கையாளர் சேவை!
வெப்சைட் வடிவமைக்கும்போது அதனுள் பிளாக்குகளை அமைத்து, தொழில் சார்ந்த பல தகவல்களை வாடிக்கையாளர்களுக்குத் தரலாம். இந்த பிளாக்குகள் மூலம் வாடிக்கையாளர்களுக்குச் சேவைகளை வாரி வழங்கவேண்டும். தகவல்களை எழுத்து வடிவில் மட்டுமல்லாமல், புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்தும் போடலாம். வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள இ-மெயில் ஐடி-யை வெப்சைட்டில் குறிப்பிடச் சொல்லலாம். மெயில் ஐடியை தெரிவிக்கும் வாடிக்கையாளர்களுக்கு மாதம் ஒருமுறை தங்களின் வெப்சைட்கள் குறித்தும், புதிய தகவல்களை மெயில் மூலமும் அனுப்பி அவர்களைக் கவரலாம்.
இப்போது வெப்சைட்டை பார்த்துக் கொண்டிருக்கும்போதே வெப்சைட் நிறுவனத்துடன் பேசும்படியான ஆப்ஷன்கள் வந்துவிட்டன. அந்த வெப்சைட்டில் 'கிளிக் தி கால்’ என்கிற ஆப்ஷன்கள் இருக்கும்பட்சத்தில் அப்போதே வெப்சைட் நிறுவனத்துடன் போனில் உரையாடி, சந்தேகங்களை நிவர்த்திச் செய்து கொள்ளலாம். இதனால் வாடிக்கையாளர்கள் காத்திருக்காமல், உடனுக்குடன் பதில் பெறமுடிகிறது.
பாதுகாப்பு நடவடிக்கைகள்!
வெப்சைட் பயனாளர் பெயர் (User Name), பாஸ்வேர்டு (Password)  போன்ற தகவல்களை ரகசியமாக வைத்திருத்தல் அவசியம். கூகுள் அனலடிக்ஸ் (google analytics)   என்ற ஃபைலை உருவாக்கும் வெப்சைட்டுக்குள் இன்ஸ்டால் செய்துவைத்துக் கொண்டால், அந்த வெப்சைட்டுக்கு வரும்
வாடிக்கையாளர் எங்கிருந்து வந்தார், எத்தனை மணிக்கு வெப்சைட்டை பார்வையிட்டார், எந்தப் பக்கத்தைப் பார்வையிட்டார் என்கிற தகவல்களைப் பெற முடியும்.
கூகுள் வெப்மாஸ்டரில்  (Webmaster)  தங்களின் வெப்சைட்டை பதிவு செய்து, பாதுகாப்பை பலப்படுத்திக்கொள்ளலாம்.
கவனிக்கவேண்டிய விஷயங்கள்!
ஒரு வெப்சைட்டின் முகப்புப் பக்கம் வழியாகவே பலரும் நுழைவார்கள். இதனை அமைப்பதில் அதிகக் கவனம் செலுத்தவேண்டும். முகப்புப் பக்கம் லோடு ஆக அதிக நேரம் எடுத்துக்கொண்டால் பார்ப்பவர்கள் எரிச்சல் அடைவார்கள். தவிர, உங்களைப் பற்றிய தகவல்கள் நேரடியாக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் எளிமையாக இருப்பது நல்லது!
தளத்தைப் பார்க்க வருபவர்களின் எண்ணிக்கையைத் தெரிவிக்கும் வசதி இருப்பது பலரின் கவனத்தை ஈர்க்கும்.
உங்கள் வெப்சைட் உங்களுக்குப் பிடித்த பிரவுஸரில் மட்டுமில்லாமல்,  மற்ற பிரவுஸர்களிலும் சரியாக இயங்க வேண்டும்.
நீங்கள் பதித்துள்ள படங்கள் சரியாக இருக்கின்றனவா, நீங்கள் எதிர்பார்க்கும் தோற்றத்தைத் தருகின்றனவா என்பதை அடிக்கடி நீங்கள் சோதித்து அறியவேண்டும். வெவ்வேறு வேகத்தில் இயங்கும் இணைய இணைப்புகளில் இந்தப் படங்கள் எப்படி இறங்கி இயங்கு கின்றன என்று சோதித்துப் பார்க்க வேண்டும்.
அனைவருக்கும் தெரிந்த மொழிகளில் உங்கள் தளத்தை அமைப்பது நல்லது. அப்போதுதான் பார்ப்பவர்கள் அந்த வெப்சைட் தங்களுக்கானது என்பதை உணர்வார்கள்.''
தொழில் செய்கிறவர்கள் இனி இணையம் மூலமும் கலக்கலாமே!