கோடை விடுமுறையில் ஊதுவத்தி தயாரிக்கும் மாணவர்கள்
கோடை விடுமுறையைப் பயனுள்ளதாக கழிக்கும் வகையில் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் ஊதுவத்தி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
÷குடும்ப வறுமையின் காரணமாக, பள்ளி நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் தங்களது பெற்றோர்களுக்கு உறுதுணையாக அவர்களது பணிகளை மாணவர்கள் கவனித்து வருகின்றனர்.
÷அந்த வகையில் கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் பெற்றோருக்கு ஆதரவாக ஊதுவத்தி தயாரிக்கும் பணியில், திருத்தணியை அடுத்த மேதினிபுரம் கிராமத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
÷குடும்ப நிதிநிலையை உயர்த்த, ஊதுவத்தி தயாரிக்கும் தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது.
÷தற்போது விவசாயம் மற்றும் எந்தவிதப் பணியும் இல்லாததால் மாற்றுத்தொழிலாக ஊதுவத்தி தயாரிக்கும் பணியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த கிராமத்தில் மொத்தம் உள்ள 100 வீடுகளில் 85 சதவீதம் பேர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
÷இதேபோல் ஆர்.கே.பேட்டை, ராஜாநகரம், கோணசமுத்திரம், நொச்சிலி, கேசவராஜகுப்பம் உட்பட பல கிராமங்களில் குலத்தொழிலாக செய்து வருகின்றனர்.
÷இது குறித்து திருத்தணியை அடுத்த மேதினிபுரம் கிராமத்தைச் சேர்ந்த காமாட்சி கூறியது: "நாங்கள் இந்தத் தொழிலை கடந்த 15 ஆண்டுகளாக செய்து வருகிறோம். கோடைகாலம் என்பதால் விவசாயக் கிணறுகளில் தண்ணீர் இல்லாததால் பயிர் செய்ய முடியாமல் கட்டட வேலை, 100 நாள் வேலை ஆகியவற்றுக்குச் சென்று மதியம் ஓய்வு நேரத்தில் ஊதுவத்தி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
÷ஊதுவத்தி தயாரிப்பதற்கான 2 வகையான மாவு மற்றும் குச்சிகளை ஏஜன்டுகளே நேரில் வந்து கொடுத்துவிட்டு செல்கின்றனர். பின்னர் வாரத்துக்கு ஒருமுறை வந்து நாங்கள் தயாரித்து வைத்த ஊதுவத்திகளை எடுத்துக் கொண்டு அதற்கான ஊதியத்தை வழங்கிவிட்டு செல்கின்றனர்.
÷ஒரு நாளைக்கு 3 ஆயிரம் ஊதுவத்திகள் தயார் செய்கிறோம்.
÷தற்போது பள்ளி விடுமுறை என்பதால் என்னுடன் எனது குழந்தைகளும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தினசரி 5 ஆயிரம் ஊதுவத்திகள் தயாரிக்க முடிகிறது. ஆயிரம் ஊதுவத்தி தயார் செய்து கொடுத்தால் ரூ.25 வழங்குகின்றனர்' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக