இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.
blogger templatesBlogger Tips and TricksFetured Content Slider

திங்கள், 17 பிப்ரவரி, 2014

உழைப்பின் முக்கியத்துவம்

உழைப்பின் முக்கியத்துவம்


இஸ்லாம் உழைக்காமல் சோம்பேரிகளாக வாழ்வதனை விரும்புவதில்லை. இதனால் அனைவரும் உழைத்து வாழ வேண்டும் என தூண்டுகின்றது. இதனை பின்வரும் அல்குர்ஆன் வசனங்கள் விளக்குகின்றன.
“அவன் எத்தகையவனென்றால் உங்களுக்கு பூமியை வாழ்வதற்கு எளிதானதாக அவன் ஆக்கிவைத்தான். ஆகவே அதன் பல பாகங்களில் சென்று, அவன் உங்களுக்கு அளித்திருக்கும் உணவிலிருந்து உண்ணுங்கள். உங்களுடைய மண்ணறைகளிலிருந்து உயிர்பெற்றெழுதல் அவன்பாலே இருக்கிறது” (76:15)
“பின்னர் ஜும்ஆத் தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டால் பள்ளியிலிருந்து வெளிப்பட்டுப் பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய பேரருளைத் தேடிக் கொள்ளுங்கள். மேலும் நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அதிகமதிகம் அல்லாஹ்வை நினைவு கூருங்கள்” (62:10)
நபி (ஸல்) அவர்களும் உழைப்பின் முக்கியத்துவத்தை பல சந்தர்ப்பங்களில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
“தன்கையால் உழைத்து உண்பதை விட வேறு எந்தச் சிறந்த உணவையும் எவரும் உண்ணுவதில்லை” புகாரி
இதனாலேயே நபிமார்கள் எல்லோரும் தமது வாழ்க்கைத் தேவைக்காக ஏதோ ஒரு தொழிலை செய்பவர்களாக இருந்துள்ளனர். அவர்களில் சிலர் விவசாயம் செய்தனர். இன்று சிலர் கைத்தொழில், வியாபாரம், மந்தை மேய்த்தல் போன்றவற்றில் ஈடுபட்டனர். முஹம்மது நபி (ஸல்) அவர்களும் வியாபாரம், ஆடு மேய்த்தல் போன்றவற்றில் ஈடுபட்டார்கள். ஸஹாபாக்களும் வியாபாரிகளாகவும் விவசாயிகளாகவும் இருந்துள்ளனர்.
நபி தாவூத் (அலை) கொல்லராகவும் ஆதம் (அலை) விவசாயியாகவும், நூஹ் (அலை) தச்சராகவும், இத்ரீஸ் (அலை) தையல் காரராகவும் மூஸா (அலை) இடையராகவும் இருந்துள்ளனர். – அல் ஹாகிம்
இஸ்லாம் ஒரு மனிதன் பிறரிடம் கை நீட்டாது. சுய மரியாதையுடனும் கெளரவத்துடனும் வாழ வேண்டும் என எதிர்பார்க்கின்றது. இதன் மூலம் உழைக்குமாறு தூண்டுகின்றது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனது ஆன்மா எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக உங்களில் ஒருவர் தனது கயிற்றை எடுத்துச் சென்று விறகு சேர்த்துத் தொழில் செய்து வருவதானது ஒரு மனிதன் கொடுத்தாலும் மறுத்தாலும் அவனிடம் சென்று கை நீட்டி யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். -புகாரி, முஸ்லிம்
உழைக்காமல் சோம்பேரிகளாக பிறரிடம் கை நீட்டி யாசகம் கேட்பவர்கள் நாளை மறுமையில் முகத்தில் கறுப்புப் புள்ளிகளுடன் வருவார்கள்.
ஒரு முறை ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். தமக்கு ஏதாவது தருமாறு கேட்டார். இது கேட்ட நபி (ஸல்) அவர்கள் ‘உங்களுடைய வீட்டில் ஏதாவது இருக்கின்றதா” எனக் கேட்டார்கள்” ஒரு போர்வையும் ஒரு பாத்திரமும் இருப்பதாக அவர் பதிலளித்தார். இவற்றைக் கொண்டு வருமாறு நபி (ஸல்) அவர்கள் பணித்தார்கள். இவ்விரு பொருள்களும் கொண்டு வரப்பட்டன. நபி (ஸல்) அவர்கள் அவற்றை ஏலத்தில் விற்றார்கள். அதற்கு இரண்டு திர்ஹம்கள் கிடைத்தன.
“இதில் ஒரு திர்ஹத்திற்கு உணவு வாங்கி குடும்பத்துக்கு கொடுக்குமாறும் அடுத்த திர்ஹத்துக்கு ஒரு கோடரி வாங்கி வாருங்கள் என்று கூறி அவரை அனுப்பி வைத்தார்கள். கோடரி வாங்கி வரப்பட்டது. அதனைப் பெற்றுக் கொண்ட நபி (ஸல்) அவர்கள் அதற்கொரு பிடியைப் பொருத்தி இந்த மனிதரிடம் ஒப்படைத்தார்கள்.
“நீங்கள் விறகு வெட்டி விற்பனை செய்யுங்கள். பதினைந்து நாட்களுக்கு இந்தப் பக்கம் தலைகாட்டக் கூடாது” என்று கூறி அனுப்பி வைத்தார்கள். அவர் நபி (ஸல்) அவர்கள் கூறியபடி விறகு வெட்டி விற்பனை செய்து வந்தார். 15 நாட்களில் பின் நபி (ஸல்) அவர்களைச் சத்தித்து தனது வருமானத்தைப் பற்றிக் கூறித் திருப்தியடைந்து இதற்கு நன்றி கூறினார். அப்போது “ இறுதி நாளில் முகத்தில் கறுத்த குறிகளுடன் வருவதைவிட இத் தொழில் உமக்கு மிகவும் சிறந்ததாகும்” திர்மிதி என்று நபி (ஸல்) அவர்கள் போதனை செய்து அவரை அனுப்பி வைத்தார்கள்.
உமர் (ரழி) அவர்கள் உழைக்காமல் அல்லாஹ்வின் மீது தவக்கல் வைத்து விட்டோம் எனக் கூறிக்கொண்டு பள்ளிவாசலில் முடங்கிக் கிடந்த சிலரைக் கண்டு அவர்களை நோக்கித் தமது சாட்டையை உயர்த்தி ‘உழைக்காமல் வருமானத்தைத் தேடி வெளியேறிச் செல்லாமல் உங்களில் எவரும் இருக்கக் கூடாது” அல்லாஹ்வே எனக்கு ரிஸ்கை வழங்கு’ எனப் பிரார்த்தனை செய்தால் மாத்திரம் போதாது: வானம் தங்கத்தையோ வெள்ளியையோ மழையாகப் பொழியப் போவதில்லை” எனக் கூறினார். மேலும் அவர்களுக்குரிய உரிமைகளை வழங்குமாறும் தொழிலாளியின் வியர்வை உலருமுன் கூலியை கொடுத்து வருமாறும் பணிக்கின்றது.
அதன் மூலம் இஸ்லாம் வறுமை ஒழிப்புக்கான திட்டத்தை முன்வைக்கின்றது என்பது தெளிவாகின்றது. எனவே சமூகங்களிலுள்ள வசதிபடைத்த செல்வந்தர்கள் அனைவரும் அவரவர் வாழ்நாளில் காணப்படும் சுயதொழியை ஏற்படுத்தி கொடுப்பார்களாயின் எமது நாடு வறுமையற்ற நாடாக மாறுவது சந்தேகம் இல்லை.
ஆகவே, நாமும் இஸ்லாம் கூறியபடி உழைத்து வாழ்ந்து பிறரையும் வாழ வைப்போமாக!
சுயதொழில்லாளர்கள்  கை எப்போதும், எதிலும் உயர்ந்த கையாக இருக்கவேண்டும். அதுதான் உயர்வின் அடையாளமும் கூட!
**********************************************************************************
உலகமாந்தர்களில் உழைக்கும் வர்க்கம் ஒன்றுதான். ஆனால் உழைக்காமல் வாழும் வர்க்கம் பலஉண்டு.
அடுத்தவர் உழைக்க அதில் வாழுபவர்கள் ஒரு ரகம். உழைக்க தெம்பிருந்தும் 'வெட்கத்தைவிட்டு' பிச்சை எடுத்து வாழுபவர்கள் ஒருரகம்.
படித்து பதவியில் இருப்பவர்களில் சிலர், லஞ்சம் என்ற பெயரில் கவுரவபிச்சை எடுப்பவர்கள் ஒருரகம்.உழைக்காமல் 'திருடி'வாழுபவர்கள் ஒருரகம்.
இப்படியான மக்கள் வாழும் நிலையில் இஸ்லாம் உழைப்பிற்கு உன்னதமான இடத்தைதந்து, அடுத்தவர் உழைப்பில் வாழாமல், அடுத்தவரை ஏய்க்காமல் உழைத்து வாழ்ந்தால் அதற்கும் நன்மையுண்டு என்று சொல்லிக்காட்டுகிறது.
இறைத்தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்" ஒருவன் ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு தன்னுடைய முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். இதன் மூலம் அல்லாஹ் அவனுக்கு இழிவு ஏற்படாமல் தடுத்து விடுவான். மக்கள் அவனுக்குக் கொடுக்கவும் செய்யலாம்; அல்லது மறுக்கவும் செய்யலாம்." [நூல்;புஹாரி,1471] 
லஞ்சம் ஒரு வஞ்சகச்செயல்
அல்லாஹ் கூறுகின்றான்;
2:188
وَلاَ تَأْكُلُواْ أَمْوَالَكُم بَيْنَكُم بِالْبَاطِلِ وَتُدْلُواْ بِهَا إِلَى الْحُكَّامِ لِتَأْكُلُواْ فَرِيقًا مِّنْ أَمْوَالِ النَّاسِ بِالإِثْمِ وَأَنتُمْ تَعْلَمُونَ
அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்;. மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்.
கவுரவமான பதவியில் இருந்தபோதும் பேராசையின் காரணமாக லஞ்சம் வாங்குபவர்களிடம், லஞ்சம் கொடுக்கக்கூடாது எனபதை இவ்வசனம் சொல்லிக்காட்டி லஞ்சத்தின் வாசலை அடைக்கிறது. ஆனால், துரதிஷ்டவசமாக இவ்வசனத்தை கடைபிடிக்கவேண்டிய முஸ்லிம்களில் சிலர் தங்களுடைய அறியாமையின் காரணமாக லஞ்சம் கொடுத்து தங்களுடைய காரியத்தை முடித்துக்கொள்வதையும் பரவலாக பார்க்கிறோம். இந்த செயல் கண்டிப்பாக தடுக்கப்படவேண்டியதாகும்.
உழைப்பே உயர்வு
உழைத்து வாழ்ந்த சத்திய சகாபாக்கள்
இறைத்தூதர் 
صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்" "ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தங்களின் கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தனர்." [நூல்;புஹாரி,எண் 2072 ]
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார். நபித்தோழர்கள் பலர் உழைத்து உண்பவர்களாக இருந்தனர். இதனால் அவர்களிடம் (வியர்வை) வாடை வீசும். இதன் காரணமாகவே 'நீங்கள் குளிக்கக் கூடாதா?' என்று அவர்களிடம் கூறப்பட்டது.[நூல்;புஹாரி எண் 2071 ]
வியர்வை சிந்தி உழைத்த சத்திய சகாபாக்களை புறந்தள்ளி, மார்க்கத்தையே பிழைப்பாக்கி கொண்ட 'மார்க்க அறிஞர்களை' என்னவென்று சொல்வது..?
தனக்கு மட்டுமல்ல, தர்மம் செய்யவும் உழைத்த உத்தமர்கள்
அபூ மஸ்வூத் அல் அன்ஸாரி ரளியல்லாஹு அன்ஹு, அறிவித்தார். "நபி صلى الله عليه وسلم அவர்கள் தர்மம் செய்யும்படி கட்டளையிட்டால், எங்களில் ஒருவர் கடைவீதிக்குச் சென்று, சுமைதூக்கி ஒரு 'முத்து' கூலியைப் பெற்று அதை தர்மம் செய்வார்! ஆனால், இன்று அவர்களில் சிலருக்கு ஓர் இலட்சம் தங்கக் காசுகள் உள்ளன!" [நூல்;புஹாரி எண் 2273 ]
"Jazaakallaahu khairan"
உழைத்து வாழச்சொல்லும் மார்க்கத்தையுடைய, உழைத்துவாழ்ந்த நபிமார்கள், சத்திய சகாபாக்கள் வழியில் உண்மை முஸ்லிம்களாகிய நாம் உழைத்துவாழ்வோம். ஏனெனில், மிம்பர் மீதேறி உத்தம நபி صلى الله عليه وسلم கூறினார்கள்;அவர்கள் மிம்பர் மீதேறி, தர்மம், சுயமரியாதை, யாசகம் ஆகியவற்றைப் பற்றி உபதேசம் செய்துவிட்டு, 'உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்ததாகும்; உயர்ந்த கை என்பது தர்மம் செய்யக்கூடியதும்; தாழ்ந்த கை என்பது யாசிக்கக் கூடியது" என்றும் கூறினார்கள்.[புஹாரி] 
உழைப்பின் முக்கியத்துவம்
பிச்சையெடுப்பதை காட்டிலும் உழைப்பு சிறந்தது

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" (கொடுக்கும்) கை தாழ்ந்த (வாங்கும்) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! தேவைபோக எஞ்சியதைக் கொடுப்பதே சிறந்த தர்மமாகும். யார் (பிறரிடம் கையேந்தாமல்) சுயமரியாதையுடன் இருக்கிறானோ அவனை அல்லாஹ்வும் அவ்வாறே ஆக்குகிறான். யார் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்க வேண்டுமென வேண்டினானோ அவனை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்கிவிடுவான்." [நூல்;புஹாரி,எண் 1427 ]

மேற்கண்ட இரு செய்திகளும் அடுத்தவர் உழைப்பில் வாழநினைப்பவர்களுக்கும், சுயமரியாதையை இழந்து பிச்சை எடுத்து பிழைப்பு நடத்த நினைப்பவர்களுக்கும் சாட்டையடியாக இருப்பதை காணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக