(பாத்திமா ஸர்மிலா இம்தியாஸ்)
கடந்த காலங்களில் எமது நாட்டில் ஏற்பட்ட அனார்த்தங்களின் காரணமாக இன்று எமது சகோதரிகள் பொருளாதாரத்தின் பங்குதாரர்களாக மாறி இருக்கின்றனர். தற்கால சூழலில் ஒரு குடும்பத்தின் பொருளாதாரம் என்பது மரக்கொப்பிலிருந்து தேன் எடுப்பது போலாக காணப்படுகின்றது. அதிகரித்த வாழ்க்கைச் செலவும் ஆடம்பரமான வாழ்க்கையுமே இதற்குக் காரணமாக அமைந்தும் இருக்கின்றது. ஆண்களின் துணை இல்லாமலும் செலவுக்கேற்ப வருமானம் இல்லாமலும் பாரிய குடும்பப் பொருளாதார நெருக்கடிக்கும் வாழ்க்கைச் செலவின் அதிகரப்பிற்கும் பல சகோதரிகள் இன்றும் முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
உள்நாட்டு யுத்த சூழல்களின்போது இல்லறம் இழந்து, உறவுகளுடன் உடமைகளையும் இழந்து ஏராளமான சகோதரிகள் புலம் பெயர்ந்து அகதி முகாம்களிலும், உறவினர் வீடுகளிலும் அவல வாழ்க்கை நடத்திக் கொண்டு இருக்கின்றனர். இல்லத் தலைவன் இன்றி இல்லத்தரசிகள் தங்களது குழந்தைகளுக்கு பசியாற உணவளிப்பதற்காக உழைக்க வேண்டிய நிலைமைக்கு உட்பட்டவர்களாகவும் காணப்படுகின்றனர். குழந்தை வளர்ப்பது எந்த ஒரு தாயானவளுக்கும் கிடைத்த பாக்கியம் என்பர். அதை அவளது அன்றாடக் கடமைகளில் ஒன்று என்றும் கூறுவது மிகையாகாது.
இக்கடமைப்பாட்டிற்கு பயன் தரக்கூடிய வகையில் பல சகோதரிகள் தங்களது குடும்ப வருமானங்களைத் தேடுவதோடு வீட்டுப் பராமரிப்பையும் தாமே செய்ய முடியும் என்ற தன்நம்பிக்கை மிக்க சகோதரிகள் சிறுகைத்தொழில்கள் செய்து அவர்களது வருமானத்தை ஈட்டுவதற்கான வழிகளை மிகுந்த யுக்தியுடன் கையாண்டு கொண்டிருப்பதை எம்மால் உணரமுடிகின்றது. தங்களின் ஜீவனோபாயத்துக்காக தாங்கள் சிந்தும் வியர்வையைக் கூடப் பொருட்படுத்தாமல் எமது இச்சகோதரிகள் கைத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அனேகமான பெண்கள் தங்களின் தொழிலுக்கான மூலப் பொருட்களை எடுத்துக் கொண்டு அவர்களது தலையின் மேல் வைத்த வண்ணம் அயல் கிராமங்களுக்கும் சென்று வருமானம் தேடிக்கொண்டு ஒரு சிறந்த தாயாகவும், குடும்பத் தலைவியாகவும் வாழ்க்கை நடத்திக்கொண்டு இருக்கின்றனர். இவ்வாறு பல்வேறுபட்ட வேலைகளையும் செய்து பல ரூபாய் தேடிக்கொள்வதற்காக பாடுபட்டு உழைக்கும் இச்சகோதரிகள் தங்களின் குழந்தைகளையும் கவனிக்கத் தவறவில்லை.
அவர்களது தேவைகளுக்காக சகோதரிகள் சுயமாக உழைத்தாலும் அதனையும் எமது சமூகம் தவரான கண்ணுடன் பார்க்கத்தான் செய்கின்றது. ஒரு பெண் தன் கணவனை இழந்து விட்டாலேயானால் அவளைப் புனைப் பெயர் சூட்டி அழைப்பதையும், அவளின் குழந்தைகளை ஒதுக்கி வைப்பதையும் தன்னகத்தே கொண்ட சமூகம் அவளது தேவைகளை கண்டுகொள்வதில் கண் மூடி தனமாகத்தான் இருந்து விடுகின்றது. சமூகத்தார் எதைச் சொன்னாலும் என் குடும்பத்தை நான் தான் பராமரிக்க வேண்டும் என்ற கடமைப்பாடான நம்பிக்கை கொண்ட சகோதரிகள்தான் இன்று பொறுமை எனும் பேர்க் கொடி ஏந்தி தங்களுக்கான குடும்ப வருமானத்தை தங்களின் கைகளினாலேயே தேடிக்கொண்டு இருக்கின்றனர்.
இவ்வருமானம் மூலமாக தங்களின் உளக் காயங்களுக்கு மருந்திடுவதோடு, வயிறார சாப்பிடும் அவர்களது குழந்தைகளைக் கண்டு மனதாரவும் ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றனர். மூன்று வேளை உணவிற்க்காய் அடுத்தவரை நாடாமல் சுய கௌரவத்துடன் சுயதொழில் செய்து சொந்தக் காலில் நிற்கின்றனர். சமூகத்தின் கண்களுக்கு இவர்கள் முல்லில் விழுந்த சேலையாக இருந்தாலும் தானும் பாடுபட்டு உழைக்கின்றேன் என்ற ஆனந்த அலையை நோக்கி நிச்சல் அடிக்கின்றனர்.
ஒரு பெண் ஆண் துணை இன்றி வாழ்வது கடினம் என்பார் எம் முன்னோர்கள். ஆனால், ஆணுக்குப் பெண் சமனானவள் என்னும் கூற்றிக்கு ஆதாரமே இன்றைய பெண்கள். இன்று சிறு கைத்தொழில் செய்துவரும் இச்சகோதரிகளே நாளைய தொழிலதிபதிகள். நிச்சயம் இவர்களின் முயற்சி முற்றுப்புள்ளி அற்றது என்பது உறுதியான போது யுத்தம் யுத்தம் என்ற சத்தமும் ஓய்ந்தது. நித்தம் நித்தம் எம் சகோதரிகள் சாதனை படைக்க தயாராகியும் விட்டனர்.
பெண் பிள்ளை என்றால் அது மூலையில் முடங்கிக் கிடந்த காலம் கரைபுரண்டு ஓடிவிட்டது என்பதை தெளிவாக எம் சமூகத்திற்கு எடுத்துக் காட்டி எமது சகோதரிகள் என்றும் சளைத்தவர்கள் அல்ல என்ற ஆதங்கத்தில் இச்சகோதரிகள் புறப்பட்டு இருக்கின்றனர். நாம் இழந்ததை நாமாகத்தானே சகோதரிகளே பெற்றுக் கொள்ளவேண்டும். பொறுமை எனும் பொக்கிஷம் உன்னிடம் இருப்பதால் பெருமையாக நீயும் வெற்றி நடை போடுகின்றாய். பெண்னே உன் விடியலை நோக்கி விரைந்து செல்கின்றாய்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக