இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் எண்ணிக்கை குறைவு.
பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பொருட்களில் டிஷ்யூ பேப்பருக்குத் தனி இடமுண்டு. கை துடைக்க, முகம் துடைக்க என பல வகைகளில் இந்த டிஷ்யூ பேப்பர் பயன்படுகிறது. கைக்குட்டை பயன்படுத்துவதைவிட டிஷ்யூ பேப்பர் பயன்படுத்துவது எளிது என்பதால் இன்றைக்கு பலரும் தங்கள் பைகளில் டிஷ்யூ பேப்பரை வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். தவிர, இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் எண்ணிக்கையும் குறைவு. எனவே, ஈடுபாட்டுடன் இந்தத் தொழிலை செய்தால் வருமானம் நிச்சயம்.
உற்பத்தி செய்வது ஒருபக்கம் என்றால், மார்க்கெட்டிங்கில் காட்டும் வேகம்தான் இந்தத் தொழிலில் ஒருவரை நிலைநிறுத்தும். இன்றைக்கு சின்ன ஹோட்டல்களில்கூட டிஷ்யூ பேப்பர்கள் பயன்படுத்துவதால், மார்க்கெட்டிங்குக்கு நிறைய அலையவேண்டி இருக்காது. சின்னச் சின்ன ஹோட்டல்கள் மொத்த வியாபாரிகளிடமிருந்தே டிஷ்யூ பேப்பர்களை வாங்குவதால், நாம் அவர்களைக் குறிவைக்கலாம். தவிர, கடைக்காரர்களின் பெயர்களை ப்ரின்ட் செய்துகொடுப்பதன் மூலமும் கவர முடியும்.
இப்போதுவரை நமது தமிழக, கேரள சந்தையை வடமாநில உற்பத்தியாளர்களே கையில் வைத்துள்ளனர். திறமையான தொழில்முனைவோர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, உள்ளூர் சந்தையைக் கைப்பற்ற உகந்தத் தொழில் இது.
திட்ட அறிக்கை! ()
இடம் : வாடகை
இயந்திரம் : 16 லட்சம்
நமது பங்கு 5% : 80ஆயிரம்
மானியம் 25% : 4 லட்சம்
வங்கிக் கடன் 70% : 11.20 லட்சம்
பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மாநில அரசின் 'நீட்ஸ்’ திட்டம் அல்லது பொது மானியத் திட்டம் என ஏதாவது ஒன்றில் இயந்திரம் வாங்கும் தொகைக்கு மானியம் பெற வாய்ப்பு உண்டு.
இந்தத் தொழிலுக்கு நடைமுறை மூலதனமாக ஒரு மாதத்துக்கு ரூ.2.50 லட்சம் தேவைப்படும். இதற்கு தனியாக வங்கிக் கடன் கிடைக்கும்.
திட்ட அனுமானங்கள்!
மூலப்பொருள் செலவு:
தினசரி ஒரு ஷிப்டுக்கு 100 கிலோ வரைக்கும் பேப்பேர் ரோல்(18 GSM) தேவைப்படும். இதன்படி கணக்கிட்டால், மாதத்துக்கு இரண்டரை முதல் மூன்று டன் வரை பேப்பர் ரோல் தேவைப்படும். 1 கிலோ பேப்பேர் ரோல் விலை ரூ.60 முதல் கிடைக்கும். ப்ளைன் டிஷ்யூ பேப்பர் என்றால் கழிவு இருக்காது. ப்ரின்டிங் செய்து தருவது என்றால் சிறிதளவு கழிவு இருக்கும். ஒரு மாதத்துக்கு 25 வேலை நாட்கள் என்று கணக்கிட்டால் பேப்பர் ரோல் செலவு (100X60X25 = 1,50,000)
விற்பனை வரவு!
பேப்பர் ரோல் உற்பத்திக்குப்பிறகு பாக்கெட் என்கிற கணக்கில் கணக்கிடப்படும். இதன்படி 1 கிலோ பேப்பர் ரோலில் உற்பத்திக்குப்பின் 12 பாக்கெட்டுகள் டிஷ்யூ பேப்பர் கிடைக்கும். ஒரு பாக்கெட் 10 ரூபாய் வரை விற்கலாம். தினசரி 100 கிலோ உற்பத்தி என்றால், ஒருநாளில் 1,200 பாக்கெட்டுகள் கிடைக்கும். அதாவது, ஒருநாளின் விற்பனை வரவு ரூ.12,000. இதன் அடிப்படையில் மாதத்துக்கு 25 வேலைநாட்கள் என்று கணக்கிட்டால் ஒரு மாத விற்பனை வரவு (12,000X25 = 3,00,000)
செலவுகள்!
உற்பத்தி செய்யப்பட்டபின் 210 பாக்கெட்டுகளாக ஓர் அட்டைப் பெட்டியில் அடைத்து விற்பனைக்கு அனுப்பவேண்டியதுதான். இதற்கான செலவு ஓர் அட்டைப் பெட்டிக்கு ரூ.40 செலவாகும். இதன்படி ஒரு மாதத்துக்கு ஆகும் செலவு ரூ.5,680.
ப்ரின்டிங் செய்துகொடுப்பது என்றால், இரண்டு கலர் இங்க் தேவை. ஒரு கலர் 10 கிலோ ரூ.1,600. நமது ஆர்டர்களைப் பொறுத்து இதைப் பயன்படுத்தலாம். சாதாரணமாக ஏழு, எட்டு மாதங்களுக்கு இதைப் பயன்படுத்தலாம். இதன்படி கணக்கிட்டால் ஒரு மாதத்துக்கு ஆகும் இங்க் செலவு ரூ.457.
நவீன வாழ்க்கைக்குத் தேவைப்படும் இந்த டிஷ்யூ பேப்பர் உற்பத்தியானது தன்னார்வம் கொண்ட புதிய தொழில்முனைவோர்களுக்கு நிச்சயம் கைதரும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
- நீரை.மகேந்திரன்,
படங்கள்: தி.விஜய்.
(திட்டவிவரங்கள் உதவி: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மேம்பாட்டு நிறுவனம் (MSME Development Institute), சென்னை.
மாதம் 30 ஆயிரம் வருமானம்!
''நான் ஏற்கெனவே ஒரு டிஷ்யூ பேப்பர் தயாரிக்கும் யூனிட்டில் மார்க்கெட்டிங் வேலைகளை செய்து வந்தேன். இந்தத் தொழிலுக்கு இருக்கும் வாய்ப்புகளைப் பார்த்து, நாமே இந்தத் தொழிலை ஏன் செய்யக்கூடாது என்று நினைத்து ஆரம்பித்தேன். என்னை ஊக்குவிக்கிற மாதிரி வங்கிக் கடனும் கிடைத்தது. என் நண்பர்களும் என்னை ஊக்குவித்தனர்.
தெளிவான மார்க்கெட்டிங் திறமை இருந்தால் இந்தத் தொழிலில் வருமானம் பார்த்துவிடலாம். ப்ராண்டு அல்லது ஹோட்டல் பெயர்களை ப்ரின்ட் செய்துகொடுக்கும் சில்லறை விற்பனை வாய்ப்புகள் தவிர, மொத்த விற்பனையாளர்களுக்கும் சப்ளை செய்யமுடியும். தற்போது இரண்டு இயந்திரங்கள் மூலம் டிஷ்யூ பேப்பர்களைத் தயாரிக்கிறேன். தொழிலைத் தொடங்கி இரண்டு ஆண்டுகள்தான் ஆகிறது.
அடுத்ததாக, இன்னொரு இயந்திரம் வாங்கத் திட்டமிட்டுள்ளேன். திறமையான தொழிலாளர்கள், மார்க்கெட்டிங் இரண்டும் இருந்தால் லாபம் நிச்சயம். உள்ளூர் மார்க்கெட் தவிர, கேரளாவுக்கும் அதிக அளவு சப்ளை செய்கிறேன். அனைத்து செலவுகளும் போக, மாதம் சுமார் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் வருகிறது.''
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக